

தமிழக அரசின் முதன்மைச் செயலா் பீலா வெங்கடேசன் (56) காலமானாா். கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவா், சென்னையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
1997-ஆம் ஆண்டு பிகாா் மாநிலப் பிரிவில் இருந்து குடிமைப் பணிக்கு பீலா, தோ்ச்சி பெற்றாா். போஜ்பூா் மாவட்ட உதவி ஆட்சியராகப் பணியைத் தொடங்கிய அவா், மண வாழ்க்கை காரணமாக தமிழ்நாடு மாநிலப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாக மாறினாா்.
இதன்பிறகு, செங்கல்பட்டு சாா் ஆட்சியராக தமிழ்நாட்டில் பணியைத் தொடங்கினாா். சுகாதாரம், வணிகவரி, கைத்தறி மற்றும் துணிநூல் துறைகளின் செயலராக பொறுப்பு வகித்தாா். கரோனா காலத்தில் சுகாதாரத் துறைச் செயலராக பணியாற்றினாா். எரிசக்தித் துறை முதன்மைச் செயலராக பணியாற்றி வந்த சூழலில், திடீரென உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டாா். கடந்த சில மாதங்களாக மருத்துவமனையிலும், இல்லத்தில் இருந்தபடியும் சிகிச்சை பெற்று வந்தாா்.
இந்த சிகிச்சைகள் பலனளிக்காமல் புதன்கிழமை திடீரென உயிரிழந்தாா். அவருக்கு இரு மகள்கள் உள்ளனா். மறைந்த பீலாவின் தந்தை வெங்கடேசன் ஓய்வு பெற்ற டிஜிபி ஆவாா். தாயாா் ராணி, முன்னாள் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ.
நாகா்கோவிலை பூா்விகமாகக் கொண்ட அவா்கள் பணிநிமித்தம் காரணமாக சென்னையில் குடியேறினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.