
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் செய்யறிவு(ஏஐ) காணொலியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
உலகம் முழுவதும் அனைத்துத் துறைகளிலும் செய்யறிவு தொழில்நுட்பம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், கடந்த ஒரு மாதமாக இளைஞர்கள் மத்தியில் கூகுளின் ஜெமினி 2.5 ஏஐ தளம் பேசுபொருளாக மாறியுள்ளது.
ஏஐ மூலம் புகைப்படங்களில் எடிட் செய்வது, பல புகைப்படங்களை இணைத்து தேவைக்கேற்ப புகைப்படம் அல்லது காணொலியை உருவாக்குவது போன்றவை டிரெண்டிங்கில் உள்ளது.
இந்த நிலையில், தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் ஏஐ காணொலி ஒன்றை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சமூக ஊடகப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
அந்த காணொலி, மு.க. ஸ்டாலின் குழந்தையாக இருக்கும் புகைப்படத்தில் தொடங்கி, கடந்த மாதம் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட புகைப்படத்துடன் நிறைவுபெறுகிறது.
சுமார் 39 நொடிகளுடன் வெளியிடப்பட்டிருக்கும் இந்த காணொலியில், இளம் வயதில் ஸ்டாலின் கைதாகும் புகைப்படம், திமுக கூட்டங்களில் பேசுவது, மேயர், எம்.எல்.ஏ., முதல்வராகும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த காணொலிக்கு, நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான ’குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்த ’ரணகளம்’ என்ற தலைப்பில் வெளியான பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட காணொலி வைரலாகி வரும் நிலையில், அவரது பதிவுக்கு நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் பலர் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.
சில நாள்களுக்கு முன்னதாக, உதயநிதி அவருடைய வளர்ப்பு நாயுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, ’ரெளடி டைம்’ எனக் குறிப்பிட்டிருந்தது வைரலானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.