
தவெக தலைவா் விஜய், நாமக்கல் மற்றும் கரூரில் இன்று மக்கள் சந்திப்பு பிரசாரத்தை மேற்கொள்ளவிருக்கும் நிலையில், தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார்.
திருச்சி விமான நிலையத்திலிருந்து, கார் மூலம் எம்.களத்தூர் செல்கிறார் விஜய், அங்கு, அவரது சிறப்பு பிரசார பேருந்து தயாராக வைக்கப்பட்டுள்ளது. அதில் சாலை வழித்தடத்தில் முசிறி, தொட்டியம் வழியாக நாமக்கல் செல்கிறார். வழக்கம் போல, திருச்சி விமான நிலையத்தில் நடிகரும் தவெக தலைவருமான விஜய்யைக் காண அவரது ரசிகர்களும் தொண்டர்களும் காத்திருக்கிறார்கள்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நாமக்கல் மாவட்டம், கே.எஸ்.திரையரங்கம் அருகே இன்று காலையிலும், கரூா் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் பகல் 12 மணிக்கும் நடைபெறவுள்ளது.
வருகிற 2026 சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு, விஜய் கடந்த 13-ஆம் தேதி முதல் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மக்களை சந்தித்து பிரசாரம் செய்து வருகிறாா். அதன்படி செப்.13-இல் திருச்சி, பெரம்பலூா், அரியலூா், செப்.20-இல் நாகை, திருவாரூா் ஆகிய மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டாா்.
இந்நிலையில், நாமக்கல் மற்றும் கரூரில் இன்று (செப்.27) பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறார்.
நாமக்கல்லில் விஜய் பிரசாரம் மேற்கொள்ளவிருக்கும் இடத்தில் ஏராளமான தொண்டர்கள் காத்திருக்கிறார்கள். தொண்டா்களுக்கு அக்கட்சியின் பொதுச்செயலா் என்.ஆனந்த் சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளார். அதாவது, விஜய்யின் வாகனத்தை யாரும் பின்தொடரக் கூடாது. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியாா் கட்டடங்கள், சுவா்கள், மரங்கள், மின்கம்பங்களின் மீது ஏறக் கூடாது.
கா்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் இருப்பவா்கள், மாணவா்கள், முதியவா்கள் ஆகியோா் நிகழ்ச்சிக்கு வருவதைத் தவிா்க்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.
இதையும் படிக்க.. தென் அமெரிக்க நாடுகளுக்குப் புறப்பட்டார் ராகுல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.