
கரூர் சம்பவத்தில் யாரையும் குற்றம்சாட்ட விரும்பவில்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
கரூர் விஜய் பிரசாரக் கூட்டநெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினரையும், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களையும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
”கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் பலியானோரின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவிக்கவும், சிகிச்சைப் பெறுபவர்களிடம் நலம் விசாரிக்கவும் பிரதமரும், உள்துறை அமைச்சரும் எங்களை அனுப்பிவைத்துள்ளார்கள். கரூர் வருவதற்கு பிரதமர் நினைத்தாலும், அவரால் வரமுடியாது சூழல் இருப்பதால் வரவில்லை. நேற்றிரவு பிரதமர் அறிவுறுத்தலை தொடர்ந்து காலையே கரூர் வந்தடைந்தோம்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் துக்கத்தை வார்த்தைகளால் கூறமுடியவில்லை. அவர்கள் பேசியதில் கலங்கினேன். பெரும்பான்மையானோர் ஏழை குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம் பிரதமரின் ஆறுதலை தெரிவித்தேன்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்திக்க மட்டுமே வந்துள்ளோம். மத்திய அரசு தரப்பில் வழங்கப்படும் நிவாரண நிதி, உடனடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
மத்திய அரசின் பிரதிநிதியாக நாங்கள் வந்துள்ளோம். கட்சி சார்பில் யாரையும் விமர்சிப்பதற்காக, குற்றம்சாட்டுவதற்காக வரவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் கூறியதை பிரதமரிடம் தெரிவிப்போம்.” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.