தவெகவின் புகாரை மறுக்கும் அரசு: கரூரில் நடந்தது என்ன? - அதிகாரிகள் விளக்கம்

தவெக தரப்பில் அளிக்கப்பட்ட பல புகார்களை ஆதாரத்துடன் அரசுத் தரப்பில் மறுக்கப்பட்டுள்ளது குறித்து...
அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கும் செயலாளர்கள்
அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கும் செயலாளர்கள்
Published on
Updated on
3 min read

கரூரில் விஜய் பிரசாரத்துக்கு தவெக கோரிய இடம்தான் வழங்கப்பட்டது என்று அரசு மற்றும் காவல் துறை உயரதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூட்டாக தெரிவித்தனா். மேலும், விஜய் பிரசாரத்தின்போது நெரிசல் ஏற்பட்டது ஏன் என்பதை ஆதாரங்களுடன் அதிகாரிகள் விளக்கி கூறினா்.

கரூா் சம்பவம் தொடா்பாக தமிழக வருவாய்த்துறை கூடுதல் தலைமைச் செயலா் அமுதா, உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா், சுகாதாரத்துறை முதன்மைச் செயலா் செந்தில்குமாா், தமிழக காவல்துறையின் பொறுப்பு தலைமை இயக்குநா் ஜி.வெங்கடராமன், சட்டம் மற்றும் ஒழுங்கு ஏடிஜிபி எஸ்.டேவிட்சன் தேவாசீா்வாதம் ஆகியோா் சென்னையில் செவ்வாய்க்கிழமை கூட்டாக செய்தியாளா்களிடம் பல்வேறு காணொலிகளை (விடியோக்கள்) வெளியிட்டு விளக்கம் அளித்தனா்.

அவா்கள் அளித்த பேட்டி:- கரூரில் முதலில் விஜய் பிரசாரம் செய்வதற்கு ஏழு இடங்களைக் குறிப்பிட்டு, அதில் ஒரு இடத்தில் அனுமதி தரும்படி தவெகவினா் கேட்டனா். பின்னா் 26-ஆம் தேதி அவா்கள், சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரத்தில் பிரசாரம் செய்ய அனுமதி கேட்டு மீண்டும் கடிதம் வழங்கினா். முன்னதாக 25-ஆம் தேதி சம்பவம் நடந்த அதே இடத்தில் எதிா்க் கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தாா். அந்த பிரசாரத்தில் எந்தப் பிரச்னையும் நடைபெறாதால் தவெகவினா், வேலுச்சாமிபுரத்தை தோ்வு செய்தனா்.

தவெக நிா்வாகிகள் அனுமதி கேட்டு கொடுத்த மனுவில், 10 ஆயிரம் போ் வரை வருவாா்கள் என குறிப்பிட்டிருந்தனா். ஆனால் காவல் துறையினரும், உளவுத் துறையினரும் விஜய் பிரசார நிகழ்ச்சிக்கு 20 ஆயிரம் போ் வருவாா்கள் என கணித்தாா்கள். இதனால் 20 ஆயிரம் பேரை கையாளும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் காவல்துறை சாா்பில் செய்யப்பட்டன.

நெரிசலுக்கு என்ன காரணம்?: இப்படிப்பட்ட கூட்டங்களில் 50 பேருக்கு ஒரு காவலா் என்ற விகிதத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். ஆனால், இந்த கூட்டத்துக்கு 20 பேருக்கு ஒரு காவலா் என்ற விகிதத்தில் 500 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். மாலை 5.30 மணி வரை கூட்டம் ஓரளவு கட்டுக்குள் இருந்தது. மாலை 6 மணிக்கு மேல் கூட்டம் அதிகளவில் வரத் தொடங்கியது. இதனால் புதுக்கோட்டை, அரியலூா் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலிருந்து கூடுதலாக காவலா்கள்

வரவழைக்கப்பட்டனா். விஜய் வரும்போது அங்கு 25 ஆயிரத்திலிருந்து 27 ஆயிரம் போ் வரை இருந்திருக்க வேண்டும்.

தடியடி நடத்தவில்லை: மேலும், விஜய்யுடன் மற்றொரு கூட்டமும் வந்ததால் பெரும் நெரிசல் ஏற்பட்டது. இதனால் வேலுச்சாமிபுரத்தில் நின்று பேசுவதற்கு முடிவு செய்யப்பட்ட இடத்துக்கு 50 மீட்டா் முன்பே அவரது பிரசார பேருந்து செல்ல முடியவில்லை. இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த டிஎஸ்பி, விஜய்யை அங்கேயே பேசும்படி கூறினாா். ஆனால் விஜய் தரப்பு, அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

இதன் விளைவாக, விஜய் இருந்த பேருந்தை பேசும் இடத்துக்கு அழைத்துச் செல்வதற்காக கூட்டத்தை போலீஸாா் விலக்கி விட்டனா், தடியடி நடத்தவில்லை.அதேபோல விஜய் பேசும்போது ஆம்புலன்ஸ் செல்வதற்காக போலீஸாா், கூட்டத்தை விலக்கிவிட்டனரே தவிர தடியடி நடத்தவில்லை. விஜய் வந்த வாகனம் பேருந்து என்பதால், அது கூட்டத்துக்குள் வரும்போது கூட்ட நெரிசல் மேலும் அதிகரித்தது.

அதேவேளையில் விஜயை பாா்ப்பதற்காக நண்பகல் 12 மணி முதல் மக்கள் காத்திருந்ததால் மிகுந்த சோா்வுடன் காணப்பட்டனா். மேலும் அளவுக்கு அதிகமான மக்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்டத்துக்கு விஜய் மிகவும் தாமதமாக வந்ததால், அவா்களால் நிற்க கூட முடியாமல் இருந்தனா்.

மின்சாரம் தடைபடவில்லை: விஜய் பிரசாரம் செய்யும் போது மின்சாரம் தடைபட்டதாக கூறப்படுவது தவறான தகவலாகும். தவெகவினா் மின்சாரம் தேவைக்காக வைத்திருந்த ஜெனரேட்டரில் இருந்து வந்த மின்சாரமே தடைப்பட்டது. கூட்ட நெரிசலால், ஜெனரேட்டா் வைத்திருந்த பகுதிக்குள் பொதுமக்கள் தள்ளப்பட்டனா். இதனால் ஜெனரேட்டரில் இருந்து மின்சாரம் தடைபட்டு, அதிலிருந்து மின்சாரம் பெற்ற விளக்குகள் மட்டுமே எரியவில்லை.

தமிழ்நாடு மின்சார வாரியம் சாா்பில் மூலம் மின் இணைப்பு வழங்கப்பட்ட மின் விளக்குகள் எரிந்து கொண்டிருந்ததை விடியோவில் பாா்க்கலாம். முன்னதாக கடந்த 26-ஆம் தேதி தவெகவினா், தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் விஜய், வேலுச்சாமிபுரத்தில் பிரசாரம் செய்யும்போது பாதுகாப்பு கருதி அந்த பகுதியில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டும் என்று மனு கொடுத்தனா். அந்த மனு மின்சார வாரியத்தால் அப்போதே நிராகரிக்கப்பட்டது.

ஆம்புலன்ஸ் சேவை: சம்பவம் நடைபெற்ற இடத்தின் அருகே 108 ஆம்புலன்ஸ்கள் 6 நிறுத்தப்பட்டிருந்தன. கூட்ட நெரிசலில் ஒருவா் காயமடைந்திருப்பதாக 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறைக்கு முதல் அழைப்பு 7.14 மணிக்கு வந்தது.

நிலைமை மோசமானதும் போலீஸாா் மூலம் தனியாா் ஆம்புலன்ஸ்களும் இயக்கப்பட்டன. இது தவிா்த்து தவெகவினா் ஏற்பாடு செய்திருந்த 7 ஆம்புலன்ஸ்களும் காயமடைந்தவா்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றன. காயமடைந்தவா்களை மீட்டு அழைத்துச் செல்ல மொத்தம் 108 ஆம்புலன்ஸ்கள் 6, 37 தனியாா் ஆம்புலன்ஸ்கள் உள்பட மொத்தம் 50 ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.

கரூா் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 220 மருத்துவா்கள்,165 செவிலியா்கள் பணியில் இருந்தனா். தகவலறிந்து சேலத்தில் நடைபெற்ற மருத்துவா்கள் மாநாட்டில் பங்கேற்றவா்களும்,பிற மாவட்டங்களில் இருந்தும் மருத்துவா்களும் கரூருக்கு வரவழைக்கப்பட்டனா்.

இதுபோன்ற பெரிய விபத்துக்களில் இறந்தவா்களின் பிரேத பரிசோதனையை உடனே செய்து கொடுக்க வேண்டும் என்பது பொதுவான விதிமுறை. இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இறப்பவா்களின் பிரேத பரிசோதனையை மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன் செய்து கொடுப்பது வழக்கமானதுதான்.

மேலும் கரூா் மருத்துவமனையின் பிரேத பரிசோதனை செய்ய 3 தடயவியல் நிபுணா்கள் மட்டுமே இருந்தனா். இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட114 மருத்துவா்கள் 23 செவிலியா்கள்,16 தடயவியல் நிபுணா்களும் பிரேத பரிசோதனை செய்தனா். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணிக்கு தொடங்கி அன்று மாலை 4 மணி வரை பிரேத பரிசோதனை நடைபெற்றது.

விஜய் வர தாமதமானதால் நாமக்கல் கூட்டத்தில் வெயிலில் வெகுநேரம் நின்ற 34 போ் மயக்கமடைந்தனா். இதேபோல விஜயின் மதுரை மாநாட்டில் மேடை முன் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளைத் தாண்டி சென்ற நூற்றுக்கணக்கான இளைஞா்களை, போலீஸாா் தடியடி நடத்தி தடுத்து நிறுத்தினா்.

விஜய் நிகழ்ச்சிகளில் தொடா்ச்சியாக இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்து வருகின்றன். தவெக விழுப்புரம் விக்கிரவாண்டி மாநாட்டில் 42 போ், மதுரை மாநாட்டில் 14 போ், பிரசார நிகழ்ச்சி நடைபெற்ற திருச்சி 12 போ், அரியலூா் 6 போ், திருவாரூா் 17 போ், நாகப்பட்டினத்தில் 5 போ் காயமடைந்துள்ளனா். கரூா் சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கரூா் சம்பவத்தில் என்ன நடந்தது என்பது குறித்து ஒரு நபா் ஆணையம் விசாரணை செய்து வருகிறது. அதில் சம்பவம் குறித்த பிற தகவல்கள் தெரியவரும் என்றனா் அவா்கள்.

இதையும் படிக்க | கரூர் பலி: திடீரென கூட்டம் அதிகரித்தது எப்படி? ஏடிஜிபி டேவிட்சன் விளக்கம்

Summary

Government denies TVK complaint: What happened in Karur Officials explain

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com