
கரூர் கூட்டநெரிசல் சம்பவம் கோர விபத்து மட்டுமே, வேறெதுவும் கிடையாது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
கரூர் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் காயமடைந்தவர்களையும், பலியானோரின் குடும்பத்தினரையும் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த கே.சி.வேணுகோபால் நிவாரணத் தொகை வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கே.சி.வேணுகோபால் பேசியதாவது:
“ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்பட்டுள்ளது. சில குடும்பங்களைச் சந்தித்தோம், அவர்கள் அனுபவிக்கும் துயரத்தை எங்களால் விவரிக்க முடியவில்லை. நாங்கள் அரசியல் ரீதியாக பழி சுமத்தும் விளையாட்டை விளையாட விரும்பவில்லை. தமிழக மக்களுடன் நிற்க விரும்புகிறோம். ராகுல் காந்தியும், கார்கேவும் அப்படிதான் நினைக்கிறார்கள். அவர்களின் சார்பாக மக்களைச் சந்திக்க வந்துள்ளோம்.
ராகுல் காந்தி எப்போதும் தமிழக மக்களுடன் உணர்வுபூர்வமாக இணைந்திருப்பவர். இந்த துயர சம்பவத்தை அறிந்து, அவர் மிகவும் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக தமிழக முதல்வரிடம் பேசி, மாநில மக்களுடன் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று தெரிவித்தார். தொடர்ந்து, பிரசாரக் கூட்டத்தை நடத்திய விஜய்யுடனும் பேசினார். ஏனெனில், இது ஒரு கோர விபத்து மட்டுமே, அதற்கு மேல் வேறெதுவும் கிடையாது.” என்றார்.
முன்னதாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தவெக தலைவர் விஜய்யை தொலைபேசியில் தொடர்புகொண்டு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி சம்பவம் குறித்து விசாரித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.