
கரூரில் நடைபெற்ற தவெக கூட்டத்தின்போது மின்சாரத்தை துண்டிக்குமாறு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அனுமதி கோரி மாவட்டச் செயலாளர் வழங்கிய கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27ஆம் தேதி இரவு நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் நேரிட்ட நெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்தில் சமூக வலைதளங்களில் திமுகவினர் குறித்து அவதூறு பரப்பும் வகையில், விஜய் பேசும்போது மின்சாரம் தடைபட்டதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன.
இந்த நிலையில், அந்தக் கூட்டத்தில் விஜய் பேசும்போது சுமார் 10,000 பேர் வரை கூடுவார்கள். இதனால், மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் விஜய் பேசும் போது மின்சாரம் தடை செய்ய வேண்டும் என தவெக மாவட்டச் செயலர் மதியழகன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அனுமதி கூறி வழங்கிய கடிதம் தற்போது வெளியாகியுள்ளது.
அந்தக் கடிதத்தில், “தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கரூருக்கு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வருகிற 27 ஆம் தேதி வேலுச்சாமிபுரத்தில் காலை 12 மணிக்கு மேல் உறையற்ற உள்ளார். மேற்படி நிகழ்ச்சி உரிய காவல் துறை அனுமதியுடன் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
வேலுச்சாமிபுரம் நெரிசலான பகுதி என்பதாலும் மக்கள் கூட்டம் அதிகமாக வரும் என்பதாலும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தலைவர் விஜய் பேசும் குறிப்பிட்ட நேரம் மட்டும் மின்சாரத்தை நிறுத்தம் செய்து தருமாறு தங்களை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், விஜய் வேலுசாமிபுரத்திற்கு வருவதற்கு இரவு 7 மணி ஆனது. இதனால், மின்சாரம் துண்டிக்கப்படவில்லை. மேலும், விஜய்யின் பிரசார வாகனத்தில் கட்டப்பட்டிருந்த மின் விளக்குகள் ஜெனரேட்டர்கள் கொண்டு பொருத்தப்பட்டிருந்தன.
விஜய் பேசிக்கொண்டிருக்கும் போது மின்வெட்டு எதுவும் செய்யப்படவில்லை. அந்தக் கட்சியினர் ஜெனரேட்டர் தடுப்புகளை உடைத்துக்கொண்டு செல்லும்போது, மின்சாரம் தடைபட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனாலேயே போதிய வெளிச்சம் இல்லாததால் மக்கள் ஒருவர் மீது ஒருவர் மோதி விழுந்து மூச்சுத்திணறலுக்கு உள்ளாகினர்.
இதுகுறித்து தலைமைப் பொறியாளர் ராஜலட்சுமி கூறுகையில், “தமிழ்நாடு மின்சார வாரியத்திடம், மின்சாரத்தை நிறுத்தக்கோரி தவெகவினர் கடிதம் சமர்ப்பித்ததாகவும், ஆனால் அது நிராகரிக்கப்பட்டதாகவும்” திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பிரசாரக் கூட்டத்துக்குச் சென்ற ஒருவர் கூறுகையில், இரவு 7 மணி முதல் 7.30 மணி வரை மின்சாரம் தடைபட்டதாகவும், அந்த நேரத்திலேயே கடும் நெரிசல் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
ஆனால், தவெக கூட்டத்தில் பிரச்சினையை ஏற்படுத்த திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் உள்ளூர் திமுக நிர்வாகிகள் இதுபோன்ற சதிச் செயலில் ஈடுபட்டதாக தவெகவினர் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
மின்சாரம் துண்டிக்கப்பட்டதா? அல்லது ஜெனரேட்டர் பிரச்சினையா? என்பது குறித்த விரிவான தகவல்கள் உரிய விசாரணைக்குப் பின்னரே தெரியவரும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.