கிறிஸ்தவத் தொண்டு நிறுவனங்களை முடக்கும் எப்சிஆர்ஏ மசோதாவைக் கொண்டுவர மத்திய பாஜக அரசு முயற்சித்து வருவதாகவும் இதில் அதிமுகவின் நிலைப்பாடு என்ன? என்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி இன்று காலை நாகர்கோயிலில் பிரசார பொதுக்கூட்ட மேடையில் பேசிய முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் மத்திய பாஜக அரசையும் அதிமுகவையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
"நாட்டில் புதிதாக ஒரு பிரச்சினை கிளம்பியிருக்கிறது! என்ன தெரியுமா? சிறுபான்மையின மக்களை, குறிப்பாக கிறிஸ்தவத் தொண்டு நிறுவனங்களைக் குறிவைத்துக் கொண்டு வரப்பட்டிருக்கும் வெளிநாட்டு நிதி பங்களிப்பு சட்டத் திருத்தம்! அதாவது, எப்சிஆர்ஏ(FCRA) மசோதா!
இதற்காகவும் தமிழ்நாட்டில் இந்த ஸ்டாலின்தான் முதல் குரல் கொடுத்திருக்கிறேன். இரண்டு நாள் முன்பே, இதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறேன். முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்திச் சொல்லியிருக்கிறேன். நேற்று, மீண்டும் பிரதமருக்கு அரசின் சார்பில் விளக்கமாக நான் கடிதம் எழுதியிருக்கிறேன்.
இந்தச் சட்டத் திருத்தத்தால் இந்தியா முழுவதும் கிறிஸ்தவச் சமுதாய மக்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள். சான்றுகளைச் சமர்ப்பிப்பதில் சிறிய தாமதம் உள்ளிட்ட பிற காரணங்களைச் சுட்டிக் காட்டி, ஒரு அமைப்பின் அங்கீகாரத்தை ரத்து செய்து, அவர்களிடம் இருக்கும் நிதியையும், சொத்தையும் பறித்துக்கொள்ள இந்த கொடுங்கோல் சட்டம் வழிவகுக்கிறது. சொத்து என்றால், மக்களுக்குச் சேவையாற்றும் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், விடுதிகள் இவைதான். இன்னும் கொடுமை என்னவென்றால், பாதி நிதியை வெளிநாட்டில் இருந்து பெற்று, மீதியை உள்நாட்டில் இருந்து பெற்று உருவாக்கிய சொத்துகளைக்கூட, இந்தச் சட்டம் வந்தால் முடக்கிவிட முடியும். பிரதமர் மோடி கண்துடைப்புக்காக, பல கிறிஸ்தவ அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, ஏழைகளின் கல்விக்காகவும் - மருத்துவத்துக்காகவும் அவர்கள் செய்யும் செயல்களை எல்லாம் பாராட்டிப் பேசியிருக்கிறார். ஆனால், இப்போது என்ன செய்கிறார்? இதுதான், அவரது உண்மையான முகம்.
இப்போது திடீர் என்று இப்படி ஒரு தன்னிச்சையான கொடுங்கோல் சட்டத்தை கொண்டு வந்தால், குறிப்பாக, பட்டியலின மக்கள், பழங்குடியின மக்கள், கிராமப்புற ஏழைகள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள். நிதி தருவதற்கு முன்வருபவர்களையும் அச்சுறுத்துவது மாதிரியான பிரிவுகள் இந்தச் சட்டத் திருத்தத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள். இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ கல்வி, மருத்துவ அமைப்புகள் இயங்கி வருகிறது. அவையெல்லாம் இல்லாமல் போனால், அரசால் அவர்கள் செய்து வரும் சேவையை, உடனே இட்டு நிரப்ப முடியாது என்பதையும் என்னுடைய கடிதத்தில் நான் சுட்டிக் காட்டியிருக்கிறேன்.
மொத்தத்தில், இந்தச் சட்டத் திருத்தம், மத சுதந்திரம் மற்றும் சமூக சேவை செய்ய விரும்பும் மக்கள் மீதான கடுமையான தாக்குதல்! அரசியலமைப்பு வழங்கும் உரிமைகளைப் பறிக்கும் செயல்!
கிறிஸ்தவ மக்கள் அதிகம் வாழும் - தேவாலயங்கள் அதிகம் இருக்கும், கேரளம், அசாம் மாநிலங்களில் தேர்தல் நடக்க இருக்கும் காரணத்தினால், இப்போதைக்கு பயந்து போய் பா.ஜ.க. அரசு சற்று பின்வாங்கி இருக்கிறது. ஆனால், கூடிய விரைவில் சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டி, இந்த மசோதாவை நிறைவேற்றிச் சட்டம் ஆக்குவதுதான் பா.ஜ.க. அரசின் சதித் திட்டம்!
கிறிஸ்தவத் தொண்டு நிறுவனங்களால் இந்துக்களும்தான் அதிகம் பயனடைகிறார்கள். மதவெறிப் பார்வையுடன் மனிதநேயச் செயல்பாடுகள் மேல் தொடுக்கும் இந்தத் தாக்குதல், ஒரு மதத்திற்கு எதிரானது மட்டுமல்ல, இது மனிதகுலத்திற்கே எதிரானது! இந்தியா மேல் உலக அளவில் அழிக்க முடியாத களங்கத்தை இந்தச் சட்டம் ஏற்படுத்தும் ஆபத்து இருக்கிறது. நாடாளுமன்றமே முடங்கும் அளவிற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இதை எதிர்த்துப் பேசியிருக்கிறார்கள்.
இதில் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன? மக்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? பழனிசாமி தனது நிலைப்பாட்டைச் சொல்ல வேண்டும். இந்த எஃப்சிஆர்ஏ சட்டத் திருத்தத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? இல்லை, குடியுரிமை திருத்தச் சட்டம், வக்பு சட்டத் திருத்தத்தில் இஸ்லாமியர்களுக்கு துரோகம் செய்தது போன்றே, அடுத்து கிறிஸ்தவ மக்களுக்கும் துரோகம் செய்யத் தயார் ஆகிவிட்டீர்களா?
நேற்று ஒரு கூட்டத்தில் பழனிசாமி பேசியிருக்கிறார். சிறுபான்மையினரைக் கண்ணை இமை காப்பது போன்று, அ.தி.மு.க. காக்கும் என்று சொல்கிறார். இப்போது எஃப்சிஆர்ஏ-வுக்கு என்ன சொல்லப் போகிறீர்கள்?
அ.தி.மு.க. என்ற கட்சி பா.ஜ.க.வின் கொத்தடிமைக் கூட்டமாக மாறிப் போயிருக்கிறது. அடிப்படை மனசாட்சி இருக்கும் அ.தி.மு.க. தொண்டர்களும், சில நிர்வாகிகளுமே வெளிப்படையாகப் புலம்புகிறார்கள். தன்னுடைய சுயநலத்திற்காக, தன்னுடைய பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, இப்படி ஒரு நிலைமையில் அ.தி.மு.க.வைக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் பழனிசாமி! இன்னும் ஷார்ப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்ற ‘நேம் போர்டை’ காப்பாற்றிக்கொள்ள, தில்லிக்கு அவர் காவடி தூக்குகிறார்.
நேற்று நெல்லைப் பொதுக் கூட்டத்தில், கலைஞர் குறித்த பழனிசாமியின் தரம்கெட்ட பேச்சைக் கண்டித்து நான் பேசியிருந்தேன். அதைக் கேட்டு, தமிழ்நாடு முழுவதும் இருக்கும் கட்சிக்காரர்கள் ஃபோனிலும், சமூக வலைத்தளங்களிலும் தங்களுடைய ஆதங்கத்தை என்னிடம் கொட்டித் தீர்த்துவிட்டார்கள். “எங்கள் மனதில் என்னென்ன இருந்ததோ, அதையெல்லாம் பேசிவிட்டீர்கள் தலைவரே” என்று சொன்னார்கள். மறைந்த தலைவரைப் பற்றி இவ்வாறு தவறாகப் பேசுவது, அரசியல் மாண்பு கிடையாது.
ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, அவரை எதிர்த்து, அவரின் ஆட்சியின் குறைகளை எதிர்த்து, நாம் நேரடியாக அரசியல் செய்திருக்கிறோம். ஆனால், அவர் மறைந்த பிறகு, உச்சபட்ச அரசியல் நாகரிகத்தை நாம் இன்றைக்கும் கடைபிடித்துக் கொண்டிருக்கிறோம்.
திடீரென முதலமைச்சரான பழனிசாமியிடம் அந்த நாகரிகத்தை எதிர்பாக்க முடியுமா? அவர் இவ்வாறு பேசுவது முதல் முறையும் கிடையாது. 2019 தேர்தலின்போதே கலைஞரை வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறார்கள். அதுபற்றி அரசே விசாரிப்போம் என்று வாய்க் கொழுப்போடு பேசினார். அதற்குப் பிறகு என்ன ஆனது? மக்களால் தோற்கடிக்கப்பட்டார் பழனிசாமி.
அதன்பிறகு, மேலும் மேலும் தோல்விகள் பெற்றாலும், அதிலிருந்து அவர் எந்தப் பாடமும் கற்றுக் கொள்ளாமல், 2021, 2024, 2026 அதுவரை பழைய ரெக்கார்டு போன்று சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டு மக்கள் கொள்கையைப் பேசுவதைத்தான் ஆதரிப்பார்களே தவிர, வாய்க்கொழுப்போடு பேசினால் அதை வரவேற்க மாட்டார்கள்.
பழனிசாமியிடம் சொல்வதற்குச் சாதனைகள் இல்லை! மக்கள் பட்ட வேதனைகள்தான் இருக்கிறது. பா.ஜ.க.வுக்கு எதிராக குரல் கொடுக்க துணிச்சலும் இல்லை! உதவியவர்களுக்கு நன்றியும் இல்லை! மனம் முழுவதும் துரோக நஞ்சுதான் இருக்கிறது. இப்படிப்பட்ட இவர் கொடுக்கும் வாக்குறுதிகளையும் தமிழ்நாட்டு மக்கள் நம்பத் தயாராக இல்லை.
ஏன்? 2011, 2016 ஆகிய இரண்டு சட்டமன்றத் தேர்தலிலும் கொடுத்த வாக்குறுதிகளை அ.தி.மு.க. நிறைவேற்றவில்லை. அந்த வாக்குறுதிகளை நான் வாசித்தால் அது பழனிசாமிக்கே நினைவிற்கு வராது. ஆனால், தி.மு.க. வாக்கு கொடுத்தால் அதை எப்படியாவது செய்து முடிப்போம்" என்று பேசினார்.
Summary
BJP govt Targets Christian Organizations by FCRA Bill, What is AIADMK's Stance? MK stalin
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இபிஎஸ்ஸை முதல்வராக்குவோம் என்று மோடி இதுவரை சொல்லியிருக்கிறாரா? மு.க. ஸ்டாலின் கேள்வி

திமுக வேட்பாளர்களை அறிவித்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

திமுகவை நம்பினால் நடுரோட்டில் நிற்பார்கள்: மயிலாப்பூரில் இபிஎஸ் பேச்சு

பாஜகவுக்கு ஓரிடம்கூட கிடைக்காது! பினராயி விஜயன் சிறப்பு நேர்காணல்!
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு


