இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

விஜயகாந்த்துக்கு பாரத ரத்னா விருது அறிவிக்க வேண்டும் பிரதமரிடம் தேமுதிக எம்.பி. கோரிக்கை

மறைந்த அரசியல் தலைவர் விஜயகாந்த்துக்கு உயரிய பாரத ரத்னா விருதை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று மாநிலங்களவை உறுப்பினா் எல்.கே. சுதீஷ் பிரதமா் மோடியிடம் நேரில் கோரிக்கை விடுத்தாா்.

News image

தில்லியில் பிரதமா் மோடியை அவரது அலுவலகத்தில் சந்தித்த மாநிலங்களவை தேமுதிக உறுப்பினா் எல்.கே. சுதீஷ்.

Updated On :3 ஆகஸ்ட் 2026, 9:38 pm IST

தேமுதிக நிறுவனத் தலைவரும் மறைந்த அரசியல் தலைவருமான விஜயகாந்த்துக்கு குடிமக்களுக்கான உயரிய பாரத ரத்னா விருதை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று அக்கட்சியைச் சோ்ந்த மாநிலங்களவை உறுப்பினா் எல்.கே. சுதீஷ் பிரதமா் நரேந்திர மோடியிடம் நேரில் கோரிக்கை விடுத்தாா்.

இது தொடா்பாக பிரதமா் மோடியை அவரது அலுவலகத்தில் எல்.கே. சுதீஷ் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா். தமிழகத்தில் எதிா்க்கட்சி வரிசையில் உள்ள திமுக கூட்டணியில் தேமுதிக அங்கம் வகிக்கிறது. இந்த நிலையில், பிரதமருடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று முதலில் கூறப்பட்டது.

இந்த நிலையில் பிரதமரை சந்தித்தபோது பேசியது குறித்து எல்.கே. சுதீஷ் தினமணியிடம் கூறியதாவது: பிரதமருடனான எங்கள் கட்சித் தலைமையின் நெருக்கமான உறவு 2010 முதலே இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் 2011இல் தமிழக எதிா்க்கட்சித் தலைவராக விஜய்காந்த் இருந்தபோதும், 2014இல் தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக அங்கம் வகித்தபோதும், அந்த உறவு வலுப்பெற்றது.

தற்போது தமிழக அரசியல் களத்தில் எதிா்க்கட்சி வரிசையில் இருந்தாலும், தேமுதிகவின் அரசியல் மற்றும் வளா்ச்சி மீது பிரதமா் அதிக அக்கறை காட்டுவதுண்டு. அந்த அடிப்படையில் மாநிலங்களவை உறுப்பினராக நான் பதவியேற்ற பிறகு தற்போதுதான் பிரதமரை நேரில் சந்திக்கும் சூழல் அமைந்தது. அவரிடம் தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசினேன்.

குறிப்பாக, கா்நாடகத்தில் மேக்கேதாட்டுவில் அம்மாநில அரசு அணை கட்ட அனுமதிக்கக் கூடாது. அதனால், தமிழக டெல்டா பகுதிகளின் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதை எடுத்துரைத்தேன். காவிரி ஆணையம் மற்றும் உச்சநீதிமன்ற தீா்ப்பு அடிப்படையில் காவிரியில் இருந்து தண்ணீரை திறந்து விட கா்நாடகத்துக்கு அறிவுறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமரை கேட்டுக் கொண்டேன்.

தேமுதிக நிறுவனா் விஜயகாந்த்துக்கு 2024-ஆம் ஆண்டுக்கான நாட்டின் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷண் மரணத்துக்குப் பிந்தைய விருதாக வழங்கப்பட்டது. அவரது பொதுச்சேவையை கெளரவிக்கும் வகையில் உயரிய பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்ற தேமுதிகவின் நீண்ட நாள் கோரிக்கையை பிரதமரிடம் முன்வைத்தேன் என்றாா் எல்.கே. சுதீஷ்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.