
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியிருப்பது குறித்து...

பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ். - கோப்புப்படம்
தமிழகம் முழுவதும் மொத்தமுள்ள 14,141 நீர்நிலைகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவற்றில் தண்ணீரே இல்லை. மிக மோசமான இந்த சூழலில் இருந்து தமிழக விவசாயிகளை பாதுகாப்பதற்காக தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:
காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள கால்வாய்கள் மூலம் காவிரி நீரைப் பெறும் 737 நீர்நிலைகளில் 694 நீர்நிலைகள் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் வறண்டு கிடக்கின்றன. தமிழகம் முழுவதும் மொத்தமுள்ள 14,141 நீர்நிலைகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவற்றில் தண்ணீரே இல்லை. மிக மோசமான இச்சூழலில் இருந்து தமிழக விவசாயிகளை பாதுகாப்பதற்காக தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும்.
தமிழ்நாடு நீர்வளத்துறையின் புள்ளிவிவரங்கள்படி, தமிழகத்தில் நீர்வளத்துறையின் பராமரிப்பில் உள்ள மொத்தம் உள்ள 14,141 நீர்நிலைகளில், 4208 நீர்நிலைகள், அதாவது 29.25% நீர்நிலைகள் முற்றிலுமாக வறண்டு விட்டன. மேலும், 5,814 நீர்நிலைகளில் 1% முதல் 25% வரை மட்டுமே நீர் உள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் பயனளிக்கும் வகையில் தண்ணீர் இல்லை. இதில் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பவை காவிரி பாசன மாவட்டங்கள் தான். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் காவிரி, கல்லணைக் கால்வாய், வெண்ணாறு ஆகிய ஆறுகளில் இருந்து கால்வாய்கள் மூலம் தண்ணீர் பெறும் 737 நீர்நிலைகளில் 694 நீர்நிலைகள், அதாவது 95% தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கின்றன. இவை தவிர ஆறுகள் மூலம் தண்ணீர் பெறாத 27 தனித்த நீர்நிலைகளில் 26 நீர்நிலைகள் வறண்டு கிடக்கின்றன. ஒட்டுமொத்தமாக காவிரி பாசன மாவட்டங்களில் 764 நீர்நிலைகளில் 720 நீர்நிலைகளில் ஒரே ஒரு சொட்டு நீர் கூட இல்லை.
காவிரி பாசன மாவட்டங்களில் நீர்வளத்துறையின் பராமரிப்பில் இருக்கும் நீர்நிலைகளின் மொத்தக் கொள்ளளவு 6.7 டி.எம்.சி ஆகும். அதில் வெறும் 0.17 டி.எம்.சி, அதாவது 2.62% அளவுக்கு மட்டுமே நீர் உள்ளது. தென்மேற்கு பருமழை பொய்த்தது, மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படாதது ஆகியவை தான் இந்த நிலைக்கு காரணமாகும். ஆனால், இதன் விளைவுகள் மிகக் கொடுமையானவை. காவிரி பாசன மாவட்டங்களின் பல பகுதிகளில் 100 அடி ஆழத்திற்குள்ளாக நிலத்தடி நீர் கிடைத்து வந்த நிலையில், இப்போது நிலத்தடி நீர்மட்டம் 200 அடிக்கும் கீழாக சென்று விட்டது. அதனால், நிலத்தடி நீரை நம்பி குறுவை சாகுபடி செய்ய முடியவில்லை; அதுமட்டுமின்றி, போர்வெல் எனப்படும் ஆழ்துளை கிணறுகளை மேலும் ஆழப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர். இதற்கான ஒவ்வொரு விவசாயிக்கும் குறைந்தது ஒரு லட்சம் முதல் பல லட்சம் வரை செலவாவதாக உழவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த ஆண்டு 6.31 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. ஆனால், நடப்பாண்டில் அது சுமார் 2 லட்சம் ஏக்கர் என்ற நிலையில் குறுகி விட்டது. அவற்றிலும் பல்லாயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த குறுவைப் பயிர்கள் நீரின்றி கருகி விட்டன. சம்பா பருவத்திலும் இதே நிலை தான் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சம்பா சாகுபடிக்காக விதைக்கும் பணிகள் ஆகஸ்ட் மத்தியில் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், நெல் விதைப்புக்கான அறிகுறிகள் கூட இன்று வரை தென்படவில்லை.
மேட்டூர் அணையிலிருந்து செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டால் தான் சம்பா சாகுபடியை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும். ஆனால், மேட்டூர் அணையில் சுமார் 85 அடி அளவுக்கு மட்டுமே தண்ணீர் இருக்கும் நிலையில், அதைக் கொண்டு அணையை திறப்பதோ, தொடர்ந்து தண்ணீர் விடுவதோ சாத்தியமல்ல. அணை திறக்கப்படுமா? என்பதைக் கணிக்கவே இன்னும் சில வாரங்கள் ஆகும் எனும் நிலையில் காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடியும் வினாக்குறியாகியுள்ளது.
கடந்த ஆண்டில் காவிரி பாசன மாவட்டங்களில் சுமார் 14 லட்சம் ஏக்கர் உள்பட தமிழ்நாடு முழுவதும் 26.25 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டது. ஆனால், நடப்பாண்டில் காவிரி பாசன மாவட்டங்களில் இந்த அளவு 4 முதல் 5 லட்சம் ஏக்கர் என்ற அளவுக்கு குறைந்து விடும் என அஞ்சப்படுகிறது. இதனால், 16 முதல் 17 லட்சம் டன் நெல் உற்பத்தி குறையும். 60 முதல் 70% அளவுக்கு விவசாயம் பாதிக்கப்படுவதால் காவிரி பாசன மாவட்ட உழவர்கள் கடுமையான பொருளாதார இழப்புக்கு ஆளாவார்கள். அதுமட்டுமின்றி, வேளாண் கூலித் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பின்றி வருவாய் இழப்புக்கு ஆளாவார்கள்.
பருவமழை பொய்த்ததாலும், கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் இந்த அளவுக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், அதை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளவில்லை. இந்த பாதிப்புகளை எதிர்கொள்வதற்கான முதல் நடவடிக்கை தமிழ்நாட்டு வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிப்பது தான். அதன்படி தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.
அத்துடன் விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்; குறுவை சாகுபடி செய்யாத விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 வீதமும், குறுவை சாகுபடி செய்து நீரின்றி பயிர்கள் வாடியதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வீதமும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். சம்பா சாகுபடி செய்யமுடியாத நிலை உருவாகும் சூழலில் அதனால் பாதிக்கப்படும் உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.10000 உதவி வழங்க வேண்டும். நிலமில்லா தொழிலாளர்களுக்கு ஒருமுறை உதவியாக ரூ.25,000 வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
Summary
In order to protect Tamil Nadu’s farmers from this extremely critical situation, Tamil Nadu must be immediately declared a drought-affected state.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





