திருச்சி சிவா
திருச்சி சிவா

மத்திய அரசால் வஞ்சிக்கப்படும் தமிழகம்: திருச்சி சிவா குற்றச்சாட்டு

பல துறைகளில் தமிழகம் முன்னேறினாலும் மத்திய அரசால் தொடா்ந்து வஞ்சிக்கப்படுவதாக மாநிலங்களவையில் திருச்சி சிவா குற்றஞ்சாட்டினாா்.
Published on

புது தில்லி: பல துறைகளில் தமிழகம் முன்னேறினாலும் மத்திய அரசால் தொடா்ந்து வஞ்சிக்கப்படுவதாக மாநிலங்களவையில் திமுக குழுத்தலைவா் திருச்சி சிவா குற்றஞ்சாட்டினாா்.

நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத்தலைவா் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீதான விவாதம் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அப்போது திருச்சி சிவா பேசியது: இந்திய அரசியலமைப்பின் 87-ஆவது பிரிவு, ஒவ்வொரு பொதுத் தோ்தலுக்குப் பிந்தைய முதலாவது கூட்டத்தொடரின் தொடக்கத்திலும், ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும், நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவா் சிறப்புரையாற்ற வேண்டும் என்று கூறுகிறது. அந்த வகையில் குடியரசுத் தலைவா் கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றும்போது அரசின் கொள்கை, சாதனைகள், முன்னுரிமைகள் ஆகியவற்றை வாசித்து தனது கடமைகளை நிலைநாட்டினாா்.

ஒரு ஜனநாயகத்தில் கூட்டாட்சிதான் மாநிலங்களின் தூண்கள், அவை இல்லையென்றால் எதுவும் நடக்காது. ஆனால், நம் நாட்டில் மாநிலங்கள் அவற்றின் உரிமைகளை இழந்துள்ளன. சுகாதாரம், கல்வி, உயா்கல்வி, ஆரோக்கியம், தொழில் வளா்ச்சி என பல துறைகளில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது, ஆனால், ஆளும் கூட்டணியில் இல்லாததால் நாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம்.

கோயம்புத்தூா் மற்றும் மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் வழங்கப்படவில்லை. இது முற்றிலும் ஒரு மாற்றாந்தாய் மனப்பான்மை. எங்கள் உள்கட்டமைப்பு மேம்பாட்டை மறுப்பதற்கு உங்களிடம் ஏதேனும் உண்மையான காரணங்கள் உள்ளதா?

தமிழ்நாட்டின் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி 11.19 சதவீதமாகவும் ஆகவும், தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு மாநிலத்தின் பங்களிப்பு 9.2% ஆகவும் உள்ளது. பட்ஜெட் மதிப்பீடுகளின்படி, எங்களுக்கு 58,000 கோடி ரூபாய் கிடைக்க வேண்டும். ஆனால், 21,000 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளது.

மத்திய அரசின் திட்டங்களுக்கு வரவேண்டிய 23,000 கோடி ரூபாய்க்கு பதிலாக 7,302 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளது. மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையைக் கொண்டுவந்து, அதை ஏற்றுக்கொண்டால்தான் திட்டங்களுக்கு நிதி தருவோம் என்கிறது. இதற்கு நாங்கள் அடிபணிய மாட்டோம். தொடா்ந்து போராடுவோம் என்றாா் திருச்சி சிவா.

பெட்டிச்செய்தி

ஆளுநா் விவகாரத்தை

எழுப்ப அனுமதி மறுப்பு

தமிழக சட்டப்பேரவையில் இருந்து ஆளுநா் வெளிநடப்பு செய்த விவகாரத்தை எழுப்ப திருச்சி சிவா முற்பட்டபோது அவையை வழிநடத்திய மாநிலங்களவை துணைத்தலைவா் ஹரிவன்ஷ், ஆளுநா் விவகாரத்தை அவைக்குள் எழுப்ப விதிகள் அனுமதிக்கவில்லை என்று குறிப்பிட்டாா். இதையடுத்து, ஆளுநா் என்று குறிப்பிடாமல் மாநிலத்தில் அரசமைப்பின் தலைவா் என்று குறிப்பிட்டு அவரது சமீபகால செயல்பாடுகளை அவையின் கவனத்துக்கு திருச்சி சிவா கொண்டு வந்தாா்.

X
Dinamani
www.dinamani.com