

முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழகம் முழுவதும் அண்ணா நினைவு நாள் இன்று(பிப். 3) அனுசரிக்கப்பட்டு வருகிறது. அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு மரியாதை செலுத்தி வருகிறார்கள்
திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், வாலாஜா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கம் வரை அமைதிப் பேரணி நடைபெற்றது.
தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
இந்த நிலையில், அண்ணா நினைவு நாளையொட்டி மெரீனாவிலுள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அண்ணா நினைவு நாளையொட்டி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”அசாத்திய வாழ்க்கை வாழ்ந்த சாமானிய மனிதன்! தலைமுறைகள் தாண்டி, எல்லோரும் விரும்பி விளிக்கும் "அண்ணா"!
"தம்பி, மக்களிடம் செல்; அவர்களுடன் வாழ்; அவர்களிடம் கற்றுக்கொள்; அவர்களை நேசி; அவர்களுக்கு சேவை செய்"
என்று மேடைப் பேச்சாக மட்டும் அல்லாமல், தன் வாழ்வின் மூச்சாக வாழ்ந்து, இன்றும் என்றும் மக்களுக்கான திராவிடவழி அரசியலின் துருவ நட்சத்திரமாக விளங்கும் நம் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாள் இன்று...
அன்றைய கொடுங்கோல் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்த, மக்களுக்கான கூட்டணி அமைத்து அண்ணா கண்ட அந்த வெற்றி தான், தமிழ்நாட்டின் அரசியலை அடுத்த நூற்றாண்டுக்கு கட்டமைத்தது.
அண்ணா அவர்கள் உயிரில், உணர்வில் கலந்திருந்த தமிழ்நாட்டை, தீயசக்தியின் கோரப் பிடியில் இருந்து மீட்க வேண்டியது அண்ணாவின் பெயர் தாங்கிய நம் அதிமுக இயக்கத்தின் வரலாற்று கடமையாகும். மக்கள் துணையோடு இந்த திமுக ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்!
அண்ணாயிசம் போற்றும் அஇஅதிமுக நல்லாட்சியை மீண்டும் நிறுவிடுவோம்! அதுவே நம் பேரறிஞர் பெருந்தகைக்கு நாம் செலுத்தும் புகழஞ்சலி!” என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.