ராமநாதபுரம் மீனவர்கள் 22 பேர் கைது: மத்திய அமைச்சருக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்!

மீனவர்கள் கைது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்...
மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்கோப்புப் படம்
Updated on
1 min read

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து இந்திய மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள் நேற்று (18-02-2026) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கை காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட அனைத்து மீனவர்களும் தாயகம் திரும்புவதற்கும், இலங்கைக் காவலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து இந்திய மீனவர்களையும் விடுவிப்பதற்கும் உடனடி தூதரக நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 22 மீனவர்களும் அவர்களது நான்கு மீன்பிடிப் படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்தை ஈர்த்துள்ள முதலமைச்சர், 18.02.2026 அன்று ராமேஸ்வரம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 மீனவர்கள் மற்றும் அவர்களது மூன்று மீன்பிடிப் படகுகளுடன் கைது செய்யப்பட்டதையும் அதே நாளில் நடந்த மற்றொரு சம்பவத்தில், ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதையும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மீனவ சமூகத்தின் வாழ்க்கையும் வாழ்வாதாரமும் கடலையே நம்பியுள்ளதால் இலங்கை அதிகாரிகளால் மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவது அவர்களது குடும்பத்தினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இன்றைய நிலவரப்படி 104 மீனவர்களும் 258 படகுகளும் இலங்கை காவலில் உள்ளதாக தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், பிப்ரவரி முதல் வாரத்தில் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட 12 மீனவர்கள் தாயகம் திரும்புவதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுவது, அவர்களின் குடும்பங்களை நிச்சயமற்ற சூழலிலும் பொருளாதார நெருக்கடியிலும் ஆழ்த்தியுள்ளது என்று தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

எனவே, இலங்கை காவலிலிருந்து விடுவிக்கப்பட்ட அனைத்து மீனவர்களும் தாயகம் திரும்புவதற்கும், தற்போது கைது செய்யப்பட்டு அங்கு காவலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து இந்திய மீனவர்களை விடுவிப்பதற்கும் உடனடி தூதரக நடவடிக்கைகளை எடுக்கவும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

Summary

CM stalin letter to External affairs minister on fishermen arrest

மு.க. ஸ்டாலின்
என்டிஏ கூட்டணி ஏன் இங்கு வரவே கூடாது என சொல்கிறேன் தெரிகிறதா? இதுதான் ரம்ஜான் பரிசா? - ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்
இலவசமாக வழங்கினால் மக்கள் வேலை செய்வார்களா? - தமிழக அரசுக்கு அடுக்கடுக்கான கேள்விகள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com