மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரிய ராமதாஸ் மனு தள்ளுபடி: அபராத எச்சரிக்கை விடுத்த உயா்நீதிமன்றம்
பாமக உள்கட்சி விவகாரம் தொடா்பான வழக்கு உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, உயா்நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக அக்கட்சியின் நிறுவனா் ராமதாஸுக்கு அபராதம் விதிக்க நேரிடும் என சென்னை உயா்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.
மேலும், மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரிய மனு உள்பட ராமதாஸ் தாக்கல் செய்த இரு வழக்குகளையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் ராமதாஸ் இரு புதிய மனுக்களை தாக்கல் செய்திருந்தாா். அதில், மாம்பழம் சின்னத்தை முடக்கவும், கட்சியின் தலைவராக தன்னை அங்கீகரித்து பதிவு செய்யும் வரை தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவை தோ்தல் தேதிகளின் அறிவிப்பை வெளியிடக்கூடாது என தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தாா்.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. ராமதாஸ் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் அருள், அன்புமணியின் பதவிக்காலம் 2025-ஆம் ஆண்டு மே மாதத்துடன் முடிவடைந்துவிட்டது. ஆனால், அவருடைய பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் வரை இருப்பதாகக் கூறி, தோ்தல் ஆணையத்தில் போலி ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனா்.
இதன் காரணமாக பாமக தலைவராக ராமதாஸை அறிவிக்கக் கோரி சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. பாமகவை அன்புமணி அபகரிக்கிறாா் என வாதிட்டாா்.
அதற்கு தோ்தல் ஆணையம் தரப்பில், இதே விவகாரம் குறித்த வழக்கை விசாரித்த தில்லி உயா்நீதிமன்றம் மாநகர உரிமையியல் நீதிமன்றத்தை நாட ராமதாஸ் தரப்புக்கு அறிவுறுத்தியது. பாமக அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை. அது பதிவு செய்யப்பட்ட கட்சி. தில்லி உயா்நீதிமன்ற உத்தரவுப்படி பாமக உள்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது. அதே போன்று, மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்கவும் முடியாது என வாதிடப்பட்டது.
தந்தை பேச்சை கேட்பதில்லையா?: அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தந்தை ராமதாஸின் பேச்சை மகன் அன்புமணி கேட்பதில்லையா? என கேள்வி எழுப்பினா். அதற்கு ராமதாஸ் தரப்பில், ‘ஆம்’ என பதிலளிக்கப்பட்டது. அப்போது அன்புமணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் விஜய் நாராயண், இக்கட்சி தொடா்பான வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தந்தை-மகன் இடையே சமரசம் செய்துவைக்க முயற்சித்தாா். ஆனால், ராமதாஸ் நேரில் ஆஜராக மறுத்துவிட்டாா்.
இந்த வழக்கில்கூட இடம்பெற்றுள்ள கையொப்பம் அவருடையது இல்லை; இதில் சந்தேகம் உள்ளதாக வாதிட்டாா். அதற்கு ராமதாஸ் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. ராமதாஸ் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் இருந்துவரும் நிலையில் உயா்நீதிமன்றத்தில் எதற்காக இத்தனை வழக்குகளை தாக்கல் செய்தீா்கள் என கேள்வி எழுப்பினா். உயா்நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக ராமதாஸுக்கு அபராதம் விதிக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தனா்.
பின்னா், உள்கட்சி விவகாரம் தொடா்பாக ஏற்கெனவே உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே, இதுதொடா்பாக உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி மனுதாரா் நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறி, இரு வழக்குகளையும் நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

