

தமிழகத்தின் அதிகார பீடத்தைத் தீர்மானிக்கும் அரசியல் திசைமானியாக வட தமிழகம் திகழ்வதுபோல, சென்னையை வெல்பவர்களே கோட்டையைக் கைப்பற்றுவர் என்பதை கடந்த அரை நூற்றாண்டுகால தேர்தல் வரலாறு உணர்த்தி வருகிறது. அதிலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 11 வட மாவட்டங்களில் உள்ள 80-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பெரும்பான்மை பெறுபவர்களே ஆட்சியைப் பிடிப்பர் என்பதும் கடந்த ஐம்பது ஆண்டுகள் தேர்தல் வரலாறு உணர்த்தும் பாடமாகும்.
எனவேதான், இந்த வட மாவட்டங்களில் தனது ஆதிக்கத்தை தக்கவைத்துக் கொள்ள திமுக விரும்புகிறது.
2021-ஆம் ஆண்டுத் தேர்தல் முடிவுகளை ஆராய்ந்தால், வட மாவட்டங்களான திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகியவற்றில் திமுக 40 இடங்களைக் கைப்பற்றியது. அதிமுக 29 இடங்களை மட்டுமே பெற்றது. இந்த இடங்களின் வித்தியாசமே ஆட்சி மாற்றத்தின் உதயத்தைத் தீர்மானித்தது.
திமுகவின் வியூகம்
அரசியல் களத்தில் எதிரெதிர் துருவங்களாகப் பயணித்த திமுகவும் தேமுதிகவும் முதன்முறையாகக் கரம் கோத்திருப்பது வட மாவட்டங்களில் புதியதொரு வாக்குச் சமன்பாட்டை உருவாக்ககூடும்.
முதல்வர் மு.கஸ்டாலின் இந்த முறை குறைந்தபட்சம் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்ல வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளார். இதை சாதிக்க வேண்டுமானால், தேமுதிகவின் விருப்ப தொகுதிகள் மற்றும் தேவையைப் பூர்த்தி செய்வது திமுக தலைமையின் தலையாய பணியாக இருக்கும். சுருக்கமாகச் சொல்வதென்றால், இது வெறும் தொகுதிப் பங்கீடு மட்டுமல்ல, எதிர்க்கட்சிகளின் வாக்கு வங்கியைச் சிதறடித்து, தன் வெற்றியைப் புள்ளியியல் ரீதியாக உறுதிப்படுத்தும் ஓர் ஆழமான அரசியல் நகர்வாகும்.
கடந்த 2021 பேரவைத் தேர்தலில் பல வட மாவட்டத் தொகுதிகளில் வெற்றி தோல்விக்கான வித்தியாசம், மிகக் குறைவாக 1,000 முதல் 5,000 வாக்குகளாக மட்டுமே இருந்தன. குறிப்பாக, பல தொகுதிகளில் அதிமுகவுக்கு எதிராக நெருக்கடியான போட்டி நிலவியது. அத்தகைய நெருக்கடியான களத்தில், தேமுதிக வசம் உள்ள சுமார் 2 முதல் 3 சதவீத வாக்குகள் ஊசலாடும் வாக்குகளாக மாறி, திமுக வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் ஒரு கவசமாகச் செயல்படும்.
தேமுதிகவின் வாக்கு வங்கி
2005, செப்டம்பர் 14-ஆம் தேதி மதுரையில் விஜயகாந்தால் நிறுவப்பட்ட தேமுதிக 2006-ஆம் ஆண்டு தனது முதல் தேர்தலிலேயே 8.38 சதவீத வாக்குகளைப் பெற்று தமிழக அரசியலில் மூன்றாவது அணிக்கான நம்பிக்கையைத் தீர்க்கமாக விதைத்தது. அதைத் தொடர்ந்து, 2011-ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு 29 இடங்களை விஜயகாந்த் கைப்பற்றினார்.
ஆனால், 2016-இல் அக்கட்சி எந்த இடமும் வெல்லாமல் போனது, 2021-இல் 60 தொகுதிகளில் போட்டியிட்டும் பூஜ்ஜிய வெற்றி என்ற நிலை, 2024-இல் 5 தொகுதிகளில் போட்டியிட்டு ஒன்றும் வெல்லாமல் சந்தித்த தொடர் சரிவு, தேமுதிகவுக்கு அதன் கட்சியமைப்பின் பலவீனத்தை வெளிப்படுத்தியது.
2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டும் தேமுதிக பெற்ற சுமார் 2.18 சதவீத வாக்குகள், அக்கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் இன்னும் சிதறாமல் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் ஒட்டியிருப்பதை நிரூபிக்கிறது. குறிப்பாக, வட மாவட்டங்களான காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகியவற்றில் உள்ள 69 தொகுதிகளில், தேமுதிக மட்டுமல்ல, பாமககூட 39 தொகுதிகளில் மூன்றாவது இடத்தில் வந்திருக்கிறது. அதாவது, இந்த மாவட்டங்களில் வெற்றி-தோல்வியானது ஜாதிய மற்றும் சமூக வாக்கு வங்கிகளின் கலவையால் தீர்மானிக்கப்படுகிறது. ஒரு கட்சியின் 2 சதவீத வாக்குகளும் வெற்றியை நிர்ணயிக்கும் ஊசலாடும் வாக்குகளாக இங்கு மாறுகின்றன. தேமுதிக அதிமுகவுடன் இணைந்திருந்தால், அது வட தமிழகத்தில் எதிர்க்கட்சிக்குக் கூடுதல் பலத்தைச் சேர்த்திருக்கும். அதைத் தடுத்து, தேமுதிகவைத் தன் பக்கம் இழுத்ததன் மூலம் எதிர்க்கட்சி முகாமைத் தற்காப்பு நிலைக்குத் தள்ளுவது திமுகவின் சாணக்கிய வியூகமாகப் பார்க்கப்படுகிறது. தேமுதிகவின் வாக்குகள் திமுக அணியுடன் சேரும்போது, வட தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஓர் அசைக்க முடியாத தளத்தை உருவாக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.
2005-இல் விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியைத் தொடங்கியது முதல் கடைசிவரையில் திமுக எதிர்ப்பு என்கிற பாதையில் மட்டும் பயணித்தார். 2016-இல் திமுகவுடன் கூட்டணி அமைத்தால் நிச்சயம் வெற்றிபெற முடியும் என்கிற சூழல் நிலவிய போதும்கூடத் தனித்து மூன்றாவது அணி அமைக்க முற்பட்டார். திமுகவும் தேமுதிகவை தனது எதிரியாகவே கருதியது. அப்படி இருந்தும், இப்போது விஜயகாந்த் இல்லாத பிரேமலதா தலைமையிலான தேமுதிகவுடன் கைகோத்திருப்பதன் பின்னணி வாக்குவங்கிக் கணக்குதான்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தாக்கம்
இந்த சவால்களுக்கு மத்தியில் மாற்று அரசியல் அடையாளத்துடன் நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகம், 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் என்று தெரிகிறது. அக்கட்சியின் பக்கம் இளைஞர்கள், புதிய வாக்காளர்கள் மற்றும் நடுநிலை வாக்காளர்களின் வாக்குகள் செல்லும் வாய்ப்பு உள்ளதாக கருதப்படுவதால், பாரம்பரிய வாக்கு வங்கிகளைக் கொண்ட கட்சிகளைத் தன் பக்கம் வைத்துக் கொள்வது பாதுகாப்பானது என திமுக தலைமை கருதுகிறது.
தேமுதிகவின் வாக்கு வங்கியில் எந்தப் பகுதி இன்னும் உயிரோட்டமாக இருக்கிறது என்பதும், அந்த வாக்குகள் திமுக வேட்பாளர்களுக்கு எந்த அளவு நேரடியாக மாறும் என்பதைப் பொருத்தே வட தமிழகத்தின் 80 தொகுதிகள் யார் வசமாகும் என்பதும் தெரியவரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.