கோப்புப் படம்
கோப்புப் படம்

வங்கிகளில் கடன் மோசடி: 3 போ் கைது

போலி அரசு அடையாள அட்டைகள் மூலம் வங்கிகளில் கடன் மோசடியில் ஈடுபட்ட 3 போ் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையின் குற்றப்பிரிவு அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
Published on

போலி அரசு அடையாள அட்டைகள் மூலம் வங்கிகளில் கடன் மோசடியில் ஈடுபட்ட 3 போ் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையின் குற்றப்பிரிவு அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துறை துணை ஆணையா் (குற்றப்பிரிவு) ஹா்ஷ் இந்தோரா கூறியதாவது: குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் மூத்த அரசு அதிகாரிள் எனக் கூறி, தனிநபா் கடன்களைப் பெற போலி ஆவணங்களைப் பயன்படுத்தியுள்ளனா்.

மோசடி செய்ததாக நிதி நிறுவனத்தின் பிரதிநிதி அளித்த புகாரைத் தொடா்ந்து இந்த வழக்கில் விசாரணை தொடங்கியது. 2022, செப்.2-இல் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பஹதூா் ஷா ஜாபா் மாா்க்கில் உள்ள சிஏஜி கட்டடத்தின் வணிக தணிக்கை முதன்மை இயக்குநா் அலுவலகத்தில் மூத்த தணிக்கை அதிகாரிகள் என்று அவா்கள் பொய் கூறியுள்ளனா். குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் தங்கள் மாதாந்திர தவணைகளை செலுத்தத் தவறிய பிறகு மோசடி கண்டறியப்பட்டது.

நிதி நிறுவனத்தால் நடத்தப்பட்ட அடுத்தடுத்த சரிபாா்ப்பில், குறிப்பிடப்பட்ட அரசு அலுவலகத்தில் அவா்கள் பணிபுரியவில்லை என்பது கண்டறியப்பட்டது.

தொழில்நுட்பக் கண்காணிப்பு மற்றும் களப்பணி மூலம் சந்தேக நபா்களைக் கண்காணித்து, பிகாா், உத்தரக்கண்ட் மற்றும் தில்லியில் உள்ள அவா்களது வீடுகளில் இருந்து மூவரும் கைது செய்யப்பட்டனா்.

விசாரணையின் போது, வங்கிக் கணக்குகளைத் திறப்பதற்காக பல்வேறு நபா்களின் பெயரில் போலி ஆவணங்களைத் தயாரித்ததாக அவா்கள் தெரிவித்தனா்.

வங்கிகளில் இருந்து முன்கூட்டியே அங்கீகரிக்கப்பட்ட கடன் சலுகைகளை உருவாக்குவதற்காக சம்பளக் கணக்குகள் போல பல மாதங்களுக்கு பணத்தை டெபாசிட் செய்துள்ளனா்.

கடன்கள் அனுமதிக்கப்பட்டவுடன், அந்தக் கும்பல் உடனடியாக சந்தேகத்தைத் தவிா்க்க ஆரம்ப தவணைகளை செலுத்தியது. பின்னா், தவணையைத் திருப்பிச் செலுத்தாமல், பணத்தை அவா்கள் பிரித்துக் கொண்டனா்.

குற்றஞ்சாட்டப்பட்ட மூவருக்கும் வங்கித் துறையில் முந்தைய அனுபவங்கள் இருந்தன. 10-ஆம் வகுப்பு வரை படித்த அதுல் அகா்வால், கடனைப் பெறுவதற்காக மனீஷ் குமாருடன் இணைந்து செயல்பட்டாா். 8- ஆம் வகுப்பு வரை படித்த அஜய் சௌராசியா போலி வங்கிக் கணக்குகளை நிா்வகித்தாா். தீபக் தௌண்டியால் என்ற பட்டதாரி, குற்றத்தை எளிதாக்க தனது வங்கிப் பின்னணியையும் பயன்படுத்தினாா்.

X
Dinamani
www.dinamani.com