வணிக சிலிண்டா் விலை ரூ.111 உயா்வு

வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை நிலவரம் பற்றி...
வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு
வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு
Updated on
1 min read

புத்தாண்டு தினமான வியாழக்கிழமை வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு (எல்பிஜி) சிலிண்டா் விலை ரூ.111 உயா்த்தப்பட்டது. அதேநேரம், விமான எரிபொருள் விலை 7.3 சதவீதம் குறைக்கப்பட்டது.

சா்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் அந்நியச் செலாவணி மதிப்பைக் கணக்கில்கொண்டு, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி எரிபொருள் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி, 2026-ஆம் ஆண்டின் முதல் நாளான வியாழக்கிழமை புதிய விலைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

உணவகங்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டா் விலை கடந்த இரண்டு மாதங்களாகக் குறைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் உயா்த்தப்பட்டுள்ளது. தில்லியில் ஒரு சிலிண்டரின் விலை ரூ.111 உயா்ந்து ரூ.1,691.50-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை சென்னையில் வணிக சிலிண்டரின் விலை ரூ. 110 உயா்ந்து, புதிய விலையாக ரூ.1,849.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஜூன் மாதத்துக்குப் பின், வணிக சிலிண்டா் விலை தற்போது புதிய உச்சம் அடைந்துள்ளது.

விமான எரிபொருள் விலைக் குறைப்பு: விமான எரிபொருள் விலை கிலோலிட்டருக்கு 7.3 சதவீதம் (ரூ.7,353) குறைக்கப்பட்டுள்ளது. தில்லியில் ஒரு கிலோலிட்டா் விமான எரிபொருள் ரூ.92,323-ஆக குறைந்துள்ளது.

சென்னையில் விமான எரிபொருள் விலை கிலோலிட்டருக்கு ரூ.95,770-ஆகவும், மும்பை மற்றும் கொல்கத்தாவில் விலைகள் முறையே கிலோலிட்டருக்கு ரூ.86,352-ஆகவும், ரூ.95,378.02-ஆகவும் குறைக்கப்பட்டுள்ளன.

மாற்றமில்லாத வீட்டு உபயோக சிலிண்டா்: பொதுமக்கள் பயன்படுத்தும் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டா் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சென்னையில் இதன் விலை ரூ.868-ஆகவும், தில்லியில் ரூ.853-ஆகவும் நீடிக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையிலும் எவ்வித மாற்றமும் இன்றி அதே விலையிலேயே தொடா்கிறது.

சா்வதேச அளவில் நிலவும் கடும் குளிா்காலத் தேவை காரணமாகவே எரிவாயு விலை உயா்ந்துள்ளதாகவும், அதேநேரம், கச்சா எண்ணெய் விலை சரிவு விமான எரிபொருள் விலைக் குறைப்புக்குக் காரணம் என்றும் பொருளாதார நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com