

பென்னாகரம்: ஒகேனக்கல்லின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக சுற்றுலாப் பயணிகள் தடையினை மீறி அருவிக்கு அருகாமையில் செல்லும், வழுவழுப்பான பாறையின் மீதேறி புகைப்படம் உள்ளிட்ட ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருவி பகுதிக்கு விடுமுறை காரணமாக நாள்தோறும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. ஒகேனக்கல்லின் முக்கிய இடங்களான முதலைப்பண்ணை, நடைபாதை, மீன் விற்பனை நிலையம், வண்ண மீன்கள் காட்சியகம், அருவிப்பகுதி, பரிசல்துறை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து கூட்ட நெரிசலாக காணப்படுகிறது.
ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு மற்றும் குற்றச்சம்பவங்கள் நிகழ்வதை தடுக்கும் வகையில் ஒகேனக்கல் காவல் நிலையத்தின் சார்பில் வழக்கமாக ஊர்காவல் படையினர், போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் புத்தாண்டு விடுமுறையை கொண்டாடும் வகையில் ஒகேனக்கல் பகுதிக்கு சுமார் 50,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர்.
இதனால் ஒகேனக்கல்லின் முக்கிய இடங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டது. காவல்துறையினரால் தடை செய்யப்பட்ட பகுதி என அறிவிக்கப்பட்டுள்ள கூட்டாறு, கோர்த்திக்கல், ஊட்டமலை பரிசல் துறை, ஆலம்பாடி உள்ளிட்ட காவிரி கரையோரப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் தடையை மீறி குளித்தனர்.
இந்நிலையில் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்து பாறை திட்டுக்கள் காணப்படுவதால் ஒகேனக்கல் பிரதான அருவி பகுதியில் மது போதையில் சுற்றுலாப் பயணிகள் ஆபத்தை உணராமல் வலுவலுப்பான பாறைகள் மீது ஏறுவதும், அருவி செல்லும் நீர்வழி பாதையில் உள்ள பாறையின் மீது அமர்ந்து குழு புகைப்படம் எடுப்பது, சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பதிவிட்டு அதிக லைக்குகள் பெறுவதற்காக அருவிக்கு அருகில் நிற்பது போன்று அத்துமீறி ஆபத்தை உணராமல் ஆபத்தை விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுகின்றனர்.
மேலும் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளதால் பரிசல் செல்லும் வழிப் பாதையில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆற்றை கடப்பது, படகு ஓட்டிகளிடம் வாக்குவாதம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
தொடர் விடுமுறை நாள்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருவதால் கூடுதலாக காவல்துறையினரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தாததால் இது போன்ற செயல்களில் சுற்றுலாப் பயணிகள் ஈடுபடுவதாகவும், சில வேளைகளில் உயிரிழப்பு நிகழும் சூழல் ஏற்பட வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே ஒகேனக்கல்லின் முக்கிய இடங்களில் கூடுதலாக பாதுகாப்புப் பணியில் காவல்துறையினர், ஊர்க்காவல் பணியாளரை ஈடுபடுத்தி அத்துமீறும் சுற்றுலாப் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.