

2025ஆம் ஆண்டு நிறைவடைந்து, 2026ஆம் ஆண்டு தொடங்கிவிட்டது. இந்த நாளில், பலரும் சேமிக்கும் பழக்கத்தின் அடுத்த அடியை நிச்சயம் எடுத்து வைக்க வேண்டியது அவசியம்.
சேமிப்பிலிருந்து முதலீடு என்பது அடுத்தகட்ட நகர்வாகவும் இருக்க வேண்டும். முதலீடு என்ற சொல்லைக் கேட்டதும், பெரிய தொகை என எண்ண வேண்டாம்.
எஸ்ஐபி என்ற வார்த்தையை அண்மையில் அதிகம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அதெல்லாம் பெரிய தொகைக்கான வாய்ப்புகள் என்று நினைத்து ஒதுங்கி விடுவோம். மாதந்தோறும் ரூ.500 முதல் இதனைத் தொடங்கலாம் என்பதை ஒரு சிலர் அறிந்திருக்கவில்லை.
சிஸ்டமெடிக் இன்வெஸ்மென்ட் பிளான் என்பதன் சுருக்கம்தான் எஸ்ஐபி. இதனை முறையான முதலீட்டுத் திட்டம் எனலாம்.
அதாவது, ஒரு சிறு தொகையை வங்கியில் மாதந்தோறும் வரவு வைப்பதைக் காட்டிலும், எஸ்ஐபி முறையில், அதாவது தொகை சேர சேர அதன் வளர்ச்சியும் அதிகரிப்பதன் காரணமாக, இது பல ஆண்டுகளில் கணிசமான தொகையாக மாறக்கூடியது.
முதலில், இந்த திட்டத்தைத் தொடங்குவதற்கான தயக்கத்திலிருந்து விடுபடவே ரூ.500 என்ற தொகையை சொல்கிறார்கள். அதில் முதலீடு செய்து ஒரு நம்பிக்கை வந்துவிட்டால், நிச்சயம் படிப்படியாக தொகையை அதிகரிக்கலாம்.
ஒருவரது வயது 20 என்று வைத்துக் கொள்வோம். அல்லது வேலைக்குச் சேர்ந்து முதல் மாதச் சம்பளத்தில் இருந்து இந்த எஸ்ஐபி மூலம் ரூ.1,000 என மாதந்தோறும் செலுத்தி வந்தால், கிட்டத்தட்ட 25 ஆண்டுகளில் ஒருவர் செய்யும் முதலீடு ரூ.3 லட்சம் ஆக இருக்கும். ஆனால், உண்மையில் இருக்கும் தொகை எவ்வளவு தெரியுமா? ரூ.12 லட்சம்.
இதனை எளிதாகக் கணக்கிடுவதாக இருந்தால்,
மாதம் ஆயிரம் என்றால் நான்கு ஆண்டுகளில் முதலீடு செய்த தொகை ரூ.48,000. 12 சதவீத வளர்ச்சியுடன் மொத்த தொகை ரு.61,015 ஆக இருக்கும். அதாவது 4 ஆண்டுகளுக்கு ரூ.13,015 கூடுதலாகக் கிடைக்கிறது.
இவ்வாறு 10 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்தால், ஒருவர் செய்த மொத்த முதலீட்டுத் தொகை ரூ.1,20,000 ஆகும். இதற்கு கிடைக்கும் வருவாய் ரூ.1,04,036 ஆகும். எனவே, மொத்த முதலீட்டுத் தொகை ரூ.2,24,036 ஆக உயரும்.
இது எப்படி நிகழும் என்றால், ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 முதலீடு செய்கிறோம். இதற்கு 12 சதவீத ஆண்டு வளர்ச்சி என்று கணக்கிட்டுக் கொண்டால், நீங்கள் முதலீடு செய்யும் தொகை மற்றும் அன்றைய மாதத்தின் வட்டி என சேர்ந்தே வளர்ச்சியடையும். இவ்வாறு தொகை கூட்டுவிகிதமாக வளர்ந்துகொண்டே இருக்கும்.
இது தொடர்ந்து 1,000 ரூபாய் செலுத்தி வந்தால். ஒருவேளை தொகையை அதிகரித்தால், முதலீடு செய்த தொகையும் அதிகரிக்கும். குறைந்தபட்சம் 12 சதவீதம் வளர்ச்சி என்பதைத் தாண்டி நல்ல வளர்ச்சியை பெறும்போது, லாபமும் அதிகமாகும்.
எனவே, 2026ஆம் ஆணடு வந்துவிட்டது. என்னவெல்லாம் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் இளம்தலைமுறையினர், இந்த மாதத்திலிருந்தே எஸ்ஐபி மூலம் மாதந்தோறும் ஒரு சிறு தொகையை முதலீடு செய்யலாம். நிதித்துறை சார்ந்த தகவல்களை அறியலாம். உங்களுக்குத் தெரிந்த நிதி ஆலோசகர்களிடமும் ஆலோசனை பெறலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.