

இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 6 கிலோ தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கடல் வழியாக கடத்திவரப்பட்ட சுமார் ரூ.7 கோடி மதிப்புள்ள 6 கிலோ தங்கம் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இருசக்கர மோட்டார் சைக்கிளுடன் கடத்தலில் ஈடுபட்ட ஒருவரையும் க்யூவ் பிரிவு போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இலங்கையிலிருந்து படகு மூலம் வேதாரண்யம் கடலோரப் பகுதிக்கு தங்கம் கடத்தப்பட்டு வருவதாக உள்நாட்டு காவல் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, வியாழக்கிழமை வேதாரண்யம் கடலோரப் பகுதியில் க்யூப் பிரிவு ஆய்வாளர் ராஜேஷ் தலைமையிலான படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
ஆறுகாட்டுத்துறையில் இருந்து இருசக்கர மோட்டார் சைக்கிளில் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் சென்றவரை பின்தொடர்ந்தனர்.
விழுந்தமாவடி கிராமம் அருகே வேதாரண்யம் -நாகை பிரதான சாலையில் சென்று அவரை போலீஸார் மறித்து பிடித்தனர். அப்போது, அவரிடம் இருந்த தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த காவல் துறையினர், தோப்புத்துறையில் உள்ள சுங்கத்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அங்கு நடத்தப்பட்ட விசாரணையில் கடத்திவரப்பட்ட தங்கத்தின் எடை 6 கிலோ என்பது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ. 7 கோடி இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது.
கடத்தலில் ஈடுபட்டவர் நாகப்பட்டினம், நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் அருகே வசித்து வரும் காத்தான் மகன் சிவக்குமார் (42) என்பது தெரியவந்தது. மேலும், இவர் 2017 ஆம் ஆண்டு ராமநாதபுரத்தில் தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்புடையவர் என்பதும் தெரிய வந்தது.
தோப்புத்துறை சுங்க தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் வழக்கு பதிவு செய்து, கடத்தலில் ஈடுபட்ட சிவகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து தனிப்பிரிவு போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.