

திருச்சி: மத நல்லிணக்கம், போதைப் பொருள் ஒழிப்பு போன்றவற்றை வலியுறுத்தி, மதிமுக பொதுச் செயலர் வைகோ மேற்கொள்ளும் நடைப்பயணத்தின்போது, அவரடம் உரிமையோடு ஒரு கோரிக்கையை வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
திருச்சியில் இருந்து மதுரைக்கு வைகோ மேற்கொள்ளும் சமத்துவ நடைபயணத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
நாட்டுக்குத் தேவையான கருத்துகளை வலியுறுத்தி வைகோ சமத்துவ நடைப்பயணத்தை இன்று திருச்சியில் தொடங்கி ஜன.12ஆம் தேதி மதுரையில் நிறைவு செய்கிறார். இவரது நடைபயணத்தின் தொடக்க நிகழ்ச்சி திருச்சி தென்னூா் அண்ணா நகா் உழவா் சந்தை அருகே உள்ள மாநகராட்சி திடலில் நடைபெற்றது. இதில், முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று நடைபயணத்தைத் தொடங்கிவைத்தார்.
விழாவில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், உரையின் நிறைவாக, வைகோவுக்கு ஒரு அன்பு கோரிக்கையையும் முன் வைத்தார்.
மு.க. ஸ்டாலின் பேசுகையில், இந்த நடைப்பயணம் வெற்றி பெற வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன், அதேவேளையில், உரிமையோடு உங்களிடம் ஒரு கோரிக்கை வைக்கவும் விரும்புகிறேன், மதிமுக தொண்டர்கள் சார்பில் என்றார். மேலும், வைகோவின் நோக்கம் பெரியதென்றாலும் அவரது உடல்நலம் எங்களுக்கு பெரியது. எனவே, இந்த நடைபயணத்தை கவனமாக மேற்கொள்ள வேண்டும், அது மட்டுமல்ல, இதுபோன்ற கடுமையான நடைப்பயணங்களை இனி மேற்கொள்ளக் கூடாது என்று அன்பான வேண்டுகோளை முன்வைக்கிறேன்.
வைகோ தனது உடல்நலனைக் கருத்தில் கொண்டு இனி இதுபோன்ற கடுமையான நடைப்பயணம் மேற்கொள்ளக் கூடாது. நீங்கள் கட்டளையிட்டால் அதனை செய்து முடிக்க மதிமுக தொண்டர்கள் தயாராக இருக்கிறார்கள்.
அதனால்தான் உரிமையோடு கேட்கிறேன். உங்கள் உடல்நிலையை பாதுகாக்க வேண்டும் என்று உரிமையோடு கேட்டுக்கொண்டு, இந்த நடைப்பயணம் வெற்றி பெற வாழ்த்துகள் என்று கூறினார்.
இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழித்து வரும் போதைப் பொருள்களை நாட்டிலிருந்து நிச்சயம் ஒழிக்க வேண்டும்.போதையின் பாதையிலிருந்து இளைஞர்களை காக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகள் முழுமையாக அல்ல ஓரளவுக்குத்தான் பலன் அளிக்கின்றன. மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் முழு பலனை அடைய முடியும் என்றும் முதல்வர் ஸ்டாலின் பேசியிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.