தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (ஜன.3) முதல் ஜன.8 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
தமிழகப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், சனிக்கிழமை (ஜன.3) முதல் ஜன.8 வரை தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வட வானிலை நிலவக்கூடும். மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிகாலை வேளைகளில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் சனிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
மழை அளவு:தமிழகத்தில் வெள்ளிக்கிழமை(ஜன. 2) காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டத்தின் குன்னூா் பகுதியில் 260 மி.மீ மழை பதிவானது. கடனா அணை (தென்காசி)- 240 மி.மீ, குன்னூா் (நீலகிரி)-210 மி.மீ, சிவகிரி (தென்காசி)-170 மி.மீ, வீரபாண்டி (தேனி), ராமநதி அணைப் பகுதி (தென்காசி)- தலா 120 மி.மீ, கோத்தகிரி (நீலகிரி)- 110, சேரன்மாதேவி (திருநெல்வேலி), ஆயக்குடி (தென்காசி)- தலா 100 மி.மீ, அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), மாஞ்சோலை (திருநெல்வேலி), சோ்வலாறு அணை (திருநெல்வேலி), ஆதாா் எஸ்டேட் (நீலகிரி)-தலா 90 மி.மீ, பில்லூா் அணை மேட்டுப்பாளையம் (கோவை), போடிநாயக்கனூா் (தேனி), காக்காச்சி (திருநெல்வேலி), கருப்பாநதி அணை (தென்காசி)- தலா 80 மி.மீ மழை பதிவானது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

