திமுக தேர்தல் அறிக்கைக்கு கருத்து கேட்க பிரத்யேக மொபைல் செயலியை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(ஜன. 2) அறிமுகம் செய்துவைத்தார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளதையொட்டி திமுகவின் தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த டிச. 22 ஆம் தேதி இந்த குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திமுகவின் தேர்தல் அறிக்கை, மக்களின் கோரிக்கைகள் அடங்கிய தேர்தல் அறிக்கையாக இருக்கும் என கனிமொழி கூறியுள்ளார்.
இந்த குழுவில் திமுக செய்தித் தொடா்புச் செயலா் டி.கே.எஸ்.இளங்கோவன், அமைச்சா்கள் கோவி.செழியன், பழனிவேல் தியாகராஜன், டி.ஆா்.பி.ராஜா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு மக்களின் கருத்துகளைக் கேட்க திமுக ஒரு மொபைல் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, திமுக தேர்தல் அறிக்கைக்கு மக்களின் கருத்துகளைக் கேட்க பிரத்யேக செய்யறிவு மொபைல் செயலியை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்துவைத்தார். செயலி மட்டுமின்றி தொடர்புகொள்ள தொலைபேசி எண், வாட்ஸ்ஆப் எண், சமூக வலைத்தள பக்கங்கள், மின்னஞ்சல், இணையதளம், ஏஐ இணையதளம் ஆகியவற்றை அறிமுகம் செய்துவைத்தார்.
செய்யறிவு(ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களிடம் தேர்தல் அறிக்கைக்கு கருத்து கேட்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் குழுவினரும் பல்வேறு தரப்பினரை நேரடியாகச் சந்தித்து கருத்து கேட்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுமக்கள் கீழ்கண்ட தளங்களின் மூலம் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி: 08069446900
வாட்ஸ்அப் (WhatsApp): 9384001724
மின்னஞ்சல்: dmkmanifesto2026@dmk.in
இணையதளம்: http://dmk.in/ta/manifesto2026
சமூக வலைத்தளங்கள்: dmkmanifesto26
செயற்கை நுண்ணறிவுத் தளம்: http://tnmanifesto.ai
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.