முதல்வரின் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் அம்சங்கள் என்ன?

அரசு ஊழியர்களுக்கான முதல்வரின் புதிய ஓய்வூதியத் திட்டம் பற்றி...
Features of MK Stalin's Tamil Nadu Assured Pension Scheme
முதல்வருக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ந்த அரசு ஊழியர்கள்
Updated on
2 min read

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பழைய ஓய்வூதியத் திட்டத்திற்குப் பதிலாக, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(ஜன. 3) உத்தரவிட்டுள்ளார்.

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் கடந்த 2003ல் நிறுத்தப்பட்டது. அதுமுதலே பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் போராடி வருகின்றன.

கடந்த சில நாள்களாகவும் அவர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இறுதியாக முதல்வர் இன்று புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்துள்ளார். சுமார் 16 லட்சத்துக்கும் மேலான அரசு ஊழியர்கள் இதன் மூலமாகப் பயன்பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தின் அம்சங்கள்

புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் கீழ்:-

1. மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். இவ்வாறு 50 சதவீதத்திற்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குவதற்கு, பணியாளர்களின் 10 சதவீத பங்களிப்போடு, ஓய்வூதிய நிதியத்திற்குத் தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும்.

2. 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும்.  

3. ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால் அவர் ஏற்கெனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.  

4. அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் போதும், பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும், அவரவரின் பணிக்காலத்திற்கேற்ப 25 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும்.

5. புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டபின், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிப் பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும்.

6. பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தின் (Contributory Pension Scheme) கீழ் பணியில் சேர்ந்து, புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் செயல்படுத்தப்படுவதற்கு முன்னர் இடைப்பட்ட காலத்தில் ஓய்வூதியம் இன்றி பணி ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும்.

மேற்கூறிய இந்த திட்டத்தை அறிமுகப்படுத்துவதால், ஓய்வூதிய நிதியத்திற்கு கூடுதலாக தமிழ்நாடு அரசு 13 ஆயிரம் கோடி ரூபாய் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ள தமிழக அரசு,

அதுமட்டுமல்லாமல், தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் அரசின் பங்களிப்பாக வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்தப் பங்களிப்புத் தொகை பணியாளர்களின் ஊதியத்திற்கேற்ப ஒவ்வொரு ஆண்டும் மேலும் உயரும் என்றும் தமிழ்நாடு அரசு சந்தித்து வரும் கடுமையான நிதிச்சூழலிலும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்களைக் காத்திடும் பொருட்டு, மேற்கூறிய செலவினங்களை தமிழ்நாடு அரசே முழுமையாக ஏற்றுக்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பெரும்பாலான கோரிக்கைகள் இதன் மூலமாக நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் இதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்ட பிறகு அதில் குறைகள் இருந்தால் முதல்வரிடம் தெரிவிப்போம் என்று ஜாக்டோ- ஜியோ சங்கம் கூறியுள்ளது.

மேலும் முதல்வரின் அறிவிப்பை வரவேற்பதுடன் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளது ஜாக்டோ- ஜியோ.

இணைப்பு
PDF
தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்
பார்க்க
Summary

Features of MK Stalin's Tamil Nadu Assured Pension Scheme

Features of MK Stalin's Tamil Nadu Assured Pension Scheme
முதல்வருக்கு நன்றி தெரிவித்த அரசு ஊழியர்கள்! போராட்டம் வாபஸ்!!
Features of MK Stalin's Tamil Nadu Assured Pension Scheme
கடைசி மாத ஊதியத்தில் 50% ஓய்வூதியம்! புதிய திட்டத்தை அறிவித்த முதல்வர்!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com