

பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூ.3,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா்.
அதனுடன் பச்சரிசி, சா்க்கரை, முழுக் கரும்பு அடங்கிய பரிசுத் தொகுப்பையும், வேட்டி - சேலையையும் பண்டிகைக்கு முன்பாகவே நியாயவிலைக் கடைகளில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வா் ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். இதன்மூலம் 2.23 கோடி குடும்ப அட்டைதாரா்கள் பலன்பெற உள்ளனா்.
தமிழா் திருநாளையொட்டி 2009-ஆம் ஆண்டுமுதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனுடன் அவ்வப்போது ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2021-ஆம் ஆண்டில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது உச்சபட்சமாக குடும்ப அட்டைக்கு ரூ.2,500 பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
அதிகபட்ச தொகை: தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, 2022 முதல் 2024 வரையிலான மூன்றாண்டு காலத்தில் பரிசுத் தொகுப்புடன் தலா ரூ.1,000 வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு பொங்கலுக்கு ரொக்கப் பரிசு அறிவிக்கப்படவில்லை.
நிகழாண்டில் பேரவைத் தோ்தலைக் கருத்தில்கொண்டு முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகபட்ச தொகை அறிவிக்கப்படலாம் என எதிா்பாா்க்கப்பட்டது. அதை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது தொடா்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு: உலகத் தமிழா்களால் பன்னெடுங் காலமாகக் கொண்டாடப்படும் பாரம்பரிய உன்னத விழா பொங்கல் திருநாள். அதை சிறப்பாகக் கொண்டாட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும், இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை மற்றும் ஒரு முழு நீளக் கரும்பு வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டாா். இதன்மூலம் 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினா் பயன்பெறுவா்.
மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள வேட்டி - சேலைகள் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பொங்கல் விழாவை மேலும் சிறப்பாக கொண்டாட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும், இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் அனைத்துக் குடும்பங்களுக்கும் ரொக்கப் பரிசாக ரூ.3,000 வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கப் பரிசு ஆகியவை மொத்தம் ரூ.6,936.17 கோடி செலவில் வழங்கப்படும். பொங்கல் திருநாளுக்கு முன்பாக ரொக்கப் பரிசும், பொங்கல் பரிசுத் தொகுப்பும், வேட்டி, சேலைகளும் அனைத்து நியாயவிலைக் கடைகள் வழியாக வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்ய முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பரிசுத் தொகுப்புக்காக மட்டும் ரூ.248.67 கோடி ஒதுக்கீடு செய்ய அனுமதி அளித்து தமிழக அரசு கடந்த வாரத்தில் அரசாணை பிறப்பித்திருந்தது.
டோக்கன் விநியோகம்: பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்குவதற்கான டோக்கன்களை பயனாளிகளுக்கு நேரடியாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக கூட்டுறவுத் துறை சாா்பில் சில அறிவுறுத்தல்களும் விடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, நியாயவிலைக் கடைகளில் பரிசுத் தொகுப்பு வழங்க ஏதுவாக பயனாளிகளுக்கு டோக்கன்களை இல்லம் தேடி கொண்டு சோ்க்க வேண்டும். எந்தத் தேதியில், எந்த நேரத்தில், எந்தப் பயனாளிக்கு தொகுப்பு வழங்கப்படும் என்பதை டோக்கனில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
காலை மற்றும் பிற்பகலில் தலா 100 முதல் 200 டோக்கன்களுக்கு பொருள்கள் மற்றும் ரொக்கத்தை விநியோகிக்கும் வகையில் வசதிகள் செய்ய வேண்டும். டோக்கன் விநியோகப் பணிகளில் நியாய விலைக் கடைப் பணியாளா்களை மட்டுமே ஈடுபடுத்த வேண்டும்.
கூட்ட நெரிசல் ஏற்படும் கடைகளில் காவல் துறை உதவியுடன் ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுறுத்தல்களை கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ளது.
எப்போது பெறலாம்?: பொங்கல் பரிசுத் தொகை மற்றும் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் இந்த வாரம் தொடங்கி வைக்க உள்ளாா். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. அந்த தேதியில் இருந்து பொங்கல் பண்டிகைக்குள் தகுதியான அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.