

நயினார் நாகேந்திரன் பேச்சு: இந்தியாவின் இரும்பு மனிதர் அமித்ஷா என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் புகழாரம் சூட்டினார்.
தமிழ்நாட்டில் இருந்து திமுக ஆட்சியை அகற்ற விரதம் மேற்கொள்வதைப்போல அல்லும் பகலும் உழைக்க வேண்டும் எனவும் தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டார்.
நயினாா் நாகேந்திரன் அக். 12-ல் தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் என்ற பிரசாரப் பயணத்தை மதுரையில் தொடங்கினாா். அனைத்து மாவட்டங்களிலும் இப்பயணம் முடிவடைந்த நிலையில், இதன் நிறைவு விழா புதுக்கோட்டையில் இன்று (ஜன. 4) நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் பள்ளத்திவயல் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் அமித் ஷா, பியூஷ் கோயல், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழக பாஜக முன்னாள் தலைவா்கள் பொன். ராதாகிருஷ்ணன், அண்ணாமலை உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் திமுகவை விமர்சித்து நயினார் நாகேந்திரன் பேசியதாவது:
''திமுகவால் தமிழக மக்கள் கண்ணீர் வடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. அமித் ஷாவால்தான் தமிழ்நாட்டில் இருந்து திமுகவை அகற்றி தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைக் கொண்டுவர முடியும்.
பாஜக சார்பில் நடந்த 'தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்' என்ற யாத்திரை திமுக ஆட்சி முடிவுக்கான தொடக்கம். தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. கொலை, கொள்ளை அதிகரித்து வருகின்றன. டாஸ்மாக்கில் கோடிக்கணக்கில் ஊழல். தாய்மார்களை மதிக்கத்தெரியாத அமைச்சர்களைக் கொண்டுள்ளது திமுக.
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானதற்கு செந்தில் பாலாஜிதான் காரணம். இதற்கெல்லாம் விடிவுகாலம் வரும். ஆட்சி மாற்றம் வந்தவுடன் அனைவரும் சிறைக்குச் செல்வார்கள்.
தன் மகன் உதயநிதி ஸ்டாலினை முதல்வராக்குவதற்காக கூட்டணியை உருவாக்கி வைத்துள்ளார் முதல்வர் மு.க. ஸ்டாலின். நெல்லைக்குச் சென்று கிறிஸ்துமஸ் கொண்டாடும் மு.க. ஸ்டாலின், தீபாவளிக்கு வாழ்த்து சொல்ல மறுக்கிறார். இது போலி மதச்சார்பின்மை.
பிரதமர் நரேந்திர மோடியும் தேவாலத்துக்குச் சென்று கிறிஸ்தவர்களுடன் இணைந்து கிறிஸ்துமஸ் கொண்டாடுகிறார். பாஜகதான் உண்மையான மதச்சார்பற்ற கட்சி.
பிகார், திருவனந்தபுரத்தில் வீசிய காற்று விரைவில் தமிழ்நாட்டில் வீசும். மேற்கு வங்கம், அஸ்ஸாம் என அனைத்து மாநிலங்களிலும் இந்தக் காற்று வீசும். அதற்கான அச்சாணிதான் அமித் ஷாவின் வருகை.
இனி திமுக ஒருபோதும் ஆட்சி அமைக்க முடியாது. விரைவில் ஆட்சி மாற்றம் வரும். அமித் ஷாவின் லட்சியம் வெல்வது நிச்சயம்'' என நயினார் நாகேந்திரன் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.