

2026இல் தமிழகத்தில் மாற்றம் நிகழ்ந்தே தீரும் என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் நிறைவு விழாவில் அவர் பேசுகையில், தமிழ்நாடுபோல் இன்றி உள்துறை அமைச்சராக அமித் ஷாவின் செயல்பாடுகள் 100க்கு 100 என இருக்கிறது. தமிழகத்தை சூழ்ந்துள்ள இருட்டு ஆட்சியில் இருந்து மக்களை காப்பாற்றும் நோக்கில் இந்த யாத்திரை. தமிழகத்தில் 54 இடங்களில் நயினார் யாத்திரை சென்றுள்ளார்.
அதற்கு காவல் துறை சரியாக அனுதிக்கவில்லை. அதை உடைத்து எந்த காலத்திலும் பேசக்கூடிய யாத்திரையாக மாற்றியுள்ளார் நயினார் நாகேந்திரன். ஏதாவது செய்து திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என மக்கள் எல்லாரும் சொல்கின்றனர். 2026க்குப் பின் திமுக வேண்டாம் என மக்கள் சொல்வது யாத்திரையின் வெற்றியைப் பிரதிபலிக்கிறது. எதிர்க்கட்சித் தலைவரும் யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். 2026இல் மாற்றம் நிகழ்ந்தே தீரும்.
திமுகவைப் பற்றி ரோடு முதல் வீடு வரை திட்டுகிறார்கள். சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. பாதுகாப்பு கொடுக்க வேண்டியவர்களுக்கே பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் என்ன நடக்கிறது என்றே 4 ஆண்டு காலம் கடத்தியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். ரூ.3,000 கொடுத்தால் ஓட்டு போடுவார்கள் என எண்ணம். ஒரு ரேஷன் அட்டை மீது ரூ.4.54 லட்சம் கடன் உள்ளது. 4 ஆண்டுகளில் ரூ.5,000 கொடுத்துவிட்டு ரூ.4.54 லட்சம் கடனை ஏற்றியுள்ளனர்.
இதை நாம்தான் கட்ட வேண்டும். இடது பாக்கெட்டில் இருந்து எடுத்த வலது பாக்கெட்டில் வைப்பது ஆட்சி இல்லை. 505 தேர்தல் வாக்குறுதியில் 364 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக முதல்வர் சொல்கிறார். முதல்வரே பொய் சொல்லும் ஆட்சி இது. வாக்குறுதி நிறைவேற்றம் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும். மாவட்ட வாரியாக கொடுத்த வாக்குறுதிகளை திமுக இணையதளப் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளனர்.
உங்கள் வலிக்கு எல்லாம் ஒரே மருந்து தேஜ கூட்டணி, 2026 தேர்தலில் அந்த மருந்தை வாங்குங்கள். இவ்வாறு குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.