

மீண்டும் ஆட்சியமைக்கும் திமுகவின் எண்ணம் நிறைவேறாது என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் வீரபாண்டி தொகுதியில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், 2026 தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் அதிமுக வென்று ஆட்சியமைக்கும். 100 நாள் வேலைத் திட்டத்தில் முறையாக சம்பளம்கூட கொடுக்க முடியாத கையாலாகாத அரசு திமுக. மக்கள் அஞ்சி வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. அது குறித்து ஸ்டாலினுக்கு கவலையில்லை.
திருத்தணியில் வடமாநில தொழிலாளரை கஞ்சா, போதையில் சிறுவர்கள் தாக்குகின்றனர். போதைப் பொருள் நடமாட்டத்தை அரசு கட்டுப்படுத்தாத காரணத்தால் இளைஞர்கள் சீரழியும் நிலை உள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய டிஜிபி இல்லை. மக்களைப் பற்றி கவலைப்படாத முதல்வர்.
மக்களைக் காக்க வேண்டும், நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் டிஜிபியை நியமியுங்கள். திமுக ஒரு கட்சி அல்ல, அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி. குடும்ப ஆட்சி தொடர வேண்டுமா?. 2026 குடும்ப ஆட்சி, வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல். அதிக நாட்கள் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த துரைமுருகனுக்கு துணை முதல்வர் பதவி இல்லை.
கருணாநிதி குடும்பத்தில் பிறக்கவில்லை என்பதால் துரைமுருகனுக்கு வாய்ப்பு தரவில்லை. திமுக குடும்பத்தில் பிறந்தவர்களுக்குத்தான் பதவி. குடும்பம்தான் திமுக கட்சி. கட்சிதான் திமுக குடும்பம். நிதி இல்லை என கூறுகிறார் ஸ்டாலின், கார் பந்தயம் நடத்துகிறார் துணை முதல்வர் உதயநிதி. திமுக ஆளும் கட்சியாக இருந்தாலும் சேலம் மாவட்டம் அதிமுகவுடையது.
திமுக ஆட்சியில் சேலம் மாவட்டத்துக்கு எந்த திட்டமும் கொண்டுவரப்படவில்லை. மீண்டும் ஆட்சியமைக்கும் திமுகவின் எண்ணம் நிறைவேறாது. இவ்வாறு குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.