

ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருகின்ற கூட்டணிக்குதான் நாம் செல்ல இருக்கின்றோம் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் நடைபெற்ற அமமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், ”ஊடக வெளிச்சத்திற்காக எந்த தீர்மானமும் நிறைவேற்றவில்லை.
மக்களின் நலன் கருதி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. திருப்பரங்குன்றம் குறித்த தீர்மானம் எந்த கட்சிக்கும் - அமைப்புக்கும் எதிராக நிறைவேற்றவில்லை. தமிழ்நாட்டின் அமைதி கெட்டுவிட கூடாது என்றும், தேர்தல் வெற்றி - தோல்வி கடந்து செயல்படுகிற இயக்கம் அமமுக. 2021 ஆம் தேர்தலில் அம்மாவின் ஆட்சி அமைய வேண்டும் என்று தேர்தலில் போட்டியிடவில்லை. அதை புரியாதவர்கள் அன்று ஆட்சியைக் கோட்டைவிட்டார்கள்.
பதவிக்காக சிலர் எங்கே சென்றாலும், தமிழ்நாடு முழுவதும் இந்த இயக்கம் உயிரோட்டத்தோடு, 75 - 50 ஆண்டுகள் சலிக்காமல் கட்டமைப்பு உருவாக்கி வைத்திருக்கும் கட்சி அமமுக. புரட்சித் தலைவர் - அம்மா வழி வந்தவர்கள் நாம். நமக்கு யாரைக் கண்டும் பயமும் இல்லை - பொறாமையும் இல்லை. தமிழ்நாட்டின் கூட்டணி ஆட்சி அமைய காரணமாக இருக்கபோவது அமமுக. தமிழ்நாட்டில் ஊழலற்ற ஆட்சி அமைய அமமுக காரணமாக இருக்கும்.
2026 தேர்தலில் அமமுக சட்டமன்றத்திற்கு ஆளும் கட்சியாக செல்ல இருக்கிறது. இந்தத் தேர்தலில் அமமுக கைகாட்டுபவர்கள்தான் முதல்வராக வர முடியும். அதற்காக யாரிடமும் சமரசம் செய்து கொள்ளவில்லை. சமரசம் செய்து கொள்ளும் தலைவரும் நான் இல்லை. ஏதோ எதோ செய்திகள் - வதந்திகளை கிளப்புவார்கள். யாரும் கவலைப்பட வேண்டாம்.
கூட்டணி பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். தேர்தல் நேரத்தில் யார் எதிரி, யார் துரோகி, யார் நண்பன் என்று என் கண்களுக்கு தெரியாது. தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த ஆட்சி அமைந்தால் நல்லதோ அதை செய்திட, என் மீது நம்பிக்கை வைத்து அதிகாரத்தை கொடுத்துள்ளீர்கள். உறுதியாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கௌரவமான இடங்களைப் பெற்று ஆட்சி அமைப்போம். கூட்டணி ஆட்சி அமைப்போம். டிடிவி தினகரன் தனியாக உட்கார்ந்து கொண்டு குடும்ப உறுப்பினர்களை வைத்துக்கொண்டு நடத்துற கட்சி கிடையாது. கௌரவமான இடங்களைத் தருகின்ற, ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருகின்ற கூட்டணிக்குதான் நாம் செல்ல இருக்கின்றோம்.
இந்தத் தேர்தலில் நாம் போட்டியின்ற தொகுதியிலும் சரி - நமது கூட்டணி வெற்றிக்காகவும் சிறப்பாக செயல்பட வேண்டும். முடிவு எடுக்க இன்னும் 30 நாள்கள் உள்ளது. நல்ல முடிவு எடுப்போம், சிறந்த முடிவு எடுப்போம். தமிழ்நாட்டு மக்கள் நலனுக்கான முடிவை எடுப்போம்” என பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.