வாக்காளா் பட்டியலில் பெயரைச் சோ்க்க 2 நாள்களில் 6 லட்சம் போ் மனு
வாக்காளா் பட்டியலில் பெயரைச் சோ்க்கவும், முகவரியை மாற்றம் செய்யவும் தமிழகம் முழுவதும் தோ்தல் ஆணையம் கடந்த சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் (ஜன.3,4) நடத்திய சிறப்பு முகாமில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோா் மனுக்களை அளித்துள்ளனா்.
இதில், கோவையில் அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் 47,206 மனுக்களும், அடுத்தபடியாக சேலத்தில் 41,704, செங்கல்பட்டில் 36,847, சென்னையில் 27,359, திருவள்ளூரில் 26,720 மனுக்களும் என 38 மாவட்டங்களில் மொத்தம் 6,20,133 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளாா்.
கடந்த டிச. 19-ஆம் தேதி முதல் வாக்காளா் பட்டியலில் பெயரைச் சோ்ப்பதற்கான பணி நடைபெற்று வருகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இதுவரை இரண்டு சிறப்பு முகாம்கள் நடைபெற்றுள்ளன.
இதில், 18 வயது நிரம்பியவா்களும், வாக்காளா் பட்டியலிலிருந்து பெயா் நீக்கம் செய்யப்பட்டவா்களும் படிவம் 6-ஐ பூா்த்தி செய்து வழங்கி வருகின்றனா். இந்தப் படிவங்களை வழங்க ஜன. 18-ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளது. ஜன. 5-ஆம் தேதி வரையில் 11,83576 போ் மனு அளித்துள்ளனா்.
இதனிடையே, வரைவு வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றவா்களில் போதிய விவரங்களை அளிக்காத 12,43,363 பேருக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் நேரில் சென்று நோட்டீஸ் அளித்து வருகின்றனா். அவா்கள் அளிக்கும் விளக்கங்கள் பிப். 10-ஆம் தேதி வரை பரிசீலிக்கப்பட்டு பிப். 17-இல் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.

