

நான் முதல்வன் திட்டத்தில் பயின்று யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சியடைந்து ஐஏஎஸ் அதிகாரியாகியுள்ள பிரஷாந்த் பேசியவை மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் உங்கள் கையில் உலகம் என்ற திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று (ஜன. 5) சென்னை நந்தம்பாக்கத்தில் தொடக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அரசின் திட்டங்களைப் பயன்படுத்தி, படித்து வாழ்க்கையில் முன்னேறியவர்கள் மேடையில் தோன்றி மாணவர்களிடையே உரையாற்றினர். இதில், எளிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்த பிரஷாந்த் ஐ.ஏ.எஸ்., அரசுத் திட்டங்கள் எந்த அளவுக்கு உதவியது என்பது குறித்துப் பேசினார்.
நிகழ்ச்சியில் பிரஷாந்த் ஐ.ஏ.எஸ்., பேசியவை:
அனைவருக்கும் வணக்கம். நான் டாக்டர் பிரஷாந்த். இந்த மேடை இரு காரணங்களுகாக மிகவும் நெருக்கமானது. 2022-ல் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் முடித்திருந்தேன். பட்டமளிப்பு விழாவில் 40 தங்கப் பதங்கங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் கையால் பெற்றேன். மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் உடன் இருந்தார்.
மற்றொன்று நான் முதல்வன் திட்டத்தின் பயனாளி நான். 2023ஆம் ஆண்டு யுபிஎஸ்சி முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றேன். இத்திட்டத்தில் மாதம் ரூ.7500 எங்களுக்கு கொடுக்கப்பட்டது. அந்த தொகை பெரிதும் உதவியாக இருந்தது.
ஏனெனில் நான் சிறுவயதாக இருக்கும்போதே எனது தந்தை புற்றுநோயால் இறந்துவிட்டார். என் தாய் தனியொருவராக குடும்பத்தை நடத்திக்கொண்டு என்னைப் படிக்கவைத்தார். நான் மருத்துவரான பிறகு தாய் பணிக்குச் செல்வதை நிறுத்திக்கொண்டார். உடல்நிலை சரியில்லாதபோதும் எனக்கு உறுதுணையாக இருந்தார்.
யுபிஎஸ்சி படிப்புக்கும்போதும் வருமானத்திற்கு மாற்று வழியில்லாதபோது நான் முதல்வன் திட்டத்தில் மாதம் கிடைத்த ரூ.7500 பணம் பெரிதும் உதவியாக இருந்தது. இரண்டாம் நிலைத் தேர்வுக்கும் அத்தொகை பெரிதும் பயன்பட்டது.
யுபிஎஸ்சி தேர்வில் உள்ள மூன்று நிலை தேர்வுகளில் முறையான ஆதரவு இல்லையென்றால், தேர்ச்சி சாத்தியமாகியிருக்காது. தற்போது நான் 2024 பேட்ஜ் ஐஏஎஸ் அதிகாரியாகியுள்ளேன்.
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய் ... என்ற குறளை நான் என் அம்மாவுக்கு சமர்ப்பிக்கிறேன்.
நமது அரசு அளித்த ஊக்கமும், ஊக்கத்தொகையும் எந்த அளவு எனக்கு உதவியிருக்கிறது என்பதை தூண்டுகோலாக எடுத்துக்கொண்டு, மேடைக்கு கீழே அமர்ந்திருப்பவர்கள் மேடை ஏற வேண்டும் என்பதே என் விருப்பம். அனைவருக்கும் வாழ்த்துகள் எனக் குறிப்பிட்டார்.
யுபிஎஸ்சி தேர்வு எந்த அளவுக்கு கடினமானது என பிரஷாந்த் ஐஏஎஸிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த பிரஷாந்த் ஐஏஎஸ், இந்த கேள்விக்கான பதிலை ஒரு பகுப்பாய்வு கொண்டு விளக்க முடியும். இந்த தேர்வுக்கு 12 லட்சம் பேர் விண்ணப்பிக்கின்றனர். முதல் நிலை தேர்வில் 12 ஆயிரம் பேர் தேர்ச்சி பெறுகின்றனர். இரண்டாம் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று நேர்காணல் செல்வது 3 ஆயிரம் பேர். நேர்காணலில் இருந்து ஆயிரம் பேர்தான் பட்டியலில் இருப்பார்கள். இவர்களில் ஐஏஎஸ் ஆக வேண்டுமென்றால் 150 பேர். ஐஏஎஸில் தமிழ்நாட்டுக்கு சேவையாற்ற வேண்டுமென்றால் 4 பேர்தான். அந்த நான்கு பேரில் ஒருவராக நீங்கள் இருக்க வேண்டும் என நினைத்தால் எளிமையானது எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.