

வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக்கொண்டால் கனவுகளை நனவாக்க வறுமை ஒரு தடையல்ல என 'உலகம் உங்கள் கையில்' திட்ட தொடக்க நிகழ்ச்சியில் இன்பா ஐபிஎஸ் பேசியது பலரைக் கவர்ந்துள்ளது.
10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் 'உங்கள் கையில் உலகம்' என்ற திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று (ஜன. 5) சென்னை நந்தம்பாக்கத்தில் தொடக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அரசின் திட்டங்களைப் பயன்படுத்தி, படித்து வாழ்க்கையில் முன்னேறிய பலர் மேடையில் தோன்றி மாணவர்களிடையே உரையாற்றினர். இதில் எளிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்த இன்பா ஐ.பி.எஸ்., பேசியது மாணவர்கள் உள்பட பலரைக் கவர்ந்துள்ளது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த இன்பா ஐபிஎஸ், தான் கடந்து வந்த பாதை குறித்துப் பேசி, சாதிக்க வறுமை ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதைக் குறிப்பிடும் வகையில் பேசி மாணவர்களுக்கு உத்வேகமளித்தார்.
தந்தை பேருந்து நடத்துனராகவும் அம்மா பீடி சுற்றுல் தொழில் செய்துவரும் எளிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்தாலும், வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு முன்னேறியது குறித்துப் பேசினார்.
நிகழ்ச்சியில் இன்பா ஐபிஎஸ் பேசியதாவது:
''என் பெயர் இன்பா. எனது ஊர் செங்கோட்டை. நான் 2024 ஐபிஎஸ் பேட்ஜை சேர்ந்த காவல் உதவி கண்காணிப்பாளர் பயிற்சியில் இருக்கிறேன். கோவையில் பயிற்சி பெறுகிறேன்.
எனது தந்தை பேருந்து நடத்துனர். என் தாய் பீடி சுற்றுகிறார். இதுபோன்ற எளிய குடும்பத்தில் இருந்து வந்து சாதிப்பது மிகவும் கடினம் என்று கூறுவார்கள். ஆனால், இந்தக் கூற்றை நம்மால் மாற்ற முடியும். நமது அரசு பல உதவிகளை செய்கிறது. இதனை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
நான் ஒரு பொறியியல் பட்டதாரி. என்னுடைய மூன்றாவது முயற்சியில் ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். முதல் இரண்டு முறையும் வீட்டில் இருந்து படித்தேன். சென்னை வந்து பயிற்சி எடுத்துப் படிக்க வசதி இல்லை.
அப்போதுதான் நான் முதல்வன் திட்டத்தில் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று, சென்னை வந்து பயிற்சி பெற்றேன். அனைத்திந்திய குடிமைப் பணி நிறுவனத்தில் பயிற்சி எடுத்து மூன்றாவது முறை எழுதிய தேர்வில் தேர்ச்சியடைந்தேன். அங்கு தங்குவதற்கோ, உணவுக்கோ, பயிற்சிக்கோ கட்டணம் இல்லை.
அத்தோடு மாதம் ரூ. 7,500 கொடுக்கின்றனர். இது முதல்நிலைத் தேர்வுக்குப் பிறகான, இரண்டாம் நிலைத் (மெயின்ஸ்) தேர்வுக்கு பெரிதும் உதவியது. அதிலும் தேர்ச்சி பெற்று 2024 ஐபிஎஸ் பேட்ஜில் ஒருவராக இருக்கிறேன்.
எளிமையாக சொல்லவேண்டுமென்றால், ஓராண்டுக்கு முன்பு பின்வரிசையில் பயனாளியாக அமர்ந்திருந்தேன். இப்போது அதிகாரியாக முன்னேறி மேடைக்கு வந்துள்ளேன்.
யுபிஎஸ்சி கனவு காணும் எல்லோரும் தேர்ச்சி பெற்று வளர வேண்டும். எல்லோருக்கும் வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன்'' என இன்பா ஐபிஎஸ் பேசினார்.
அவரின் பேச்சுக்கு நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களான மயில்சாமி அண்ணாதுரை உள்பட பலர் கைதட்டி வரவேற்பு தெரிவித்தனர். இவரின் பேச்சு இணையத்தில் தற்போது பலரால் பாராட்டப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.