

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்தில் அதிகப்படியான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இதற்கு இலங்கைக் கடலோரப் பகுதிக்கு அருகே உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியே காரணம் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வானிலை நிலவரங்களை அவ்வபோது சமூக ஊடகங்களில் பதிவிடும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் மழை நிலவரம் தொடர்பாக தெரிவித்திருப்பதாவது:
இலங்கைக் கடலோரப் பகுதிக்கு அருகே உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஜன. 8 அல்லது 9 ஆம் தேதி முதல் ஜன. 13 அல்லது 14 ஆம் தேதி வரை தமிழக கடலோரப் பகுதிகளிலும், உள் தமிழகத்திலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த 5 ஆண்டுகளாக எல் நினோ, லா நினோ அல்லது இயல்பான பருவநிலையாக இருந்தாலும், தமிழ்நாட்டில் ஜனவரி மாதத்தில் இயல்புக்கு அதிகமான மழை பதிவாகும்.
பொதுவாக, தமிழகத்தில் ஜனவரி மாதத்தில் மிகக் குறைந்த அளவு மழை கிடைக்கும். இதன் நீண்டகால சராசரி மழையளவு 12.3 மி.மீ. மட்டுமே.
ஆனால், தமிழகம் இந்த ஆண்டில் மட்டும், ஜனவரி 1 முதல் 5 ஆம் தேதி வரை ஏற்கனவே 7.8 மி.மீ. மழையைப் பெற்றுள்ளது. மேலும், அடுத்த சுற்று மழைப்பொழிவு எதிர்பார்க்கப்படுவதால், இந்த ஆண்டும் ஜனவரி மாதம் அதிக மழைப்பொழிவைப் பெறும்.
கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் ஜனவரி மழையளவு:
2026 - 7.8 மி.மீ. (ஜன. 5 வரை)
2025 - 24.3 மி.மீ.(அதிகம்)
2024 - 50.5 மி.மீ. (மிக அதிகம்)
2023 - 5.1 மி.மீ. (குறைவு)
2022 - 34.8 மி.மீ. (அதிகம்)
2021 - 139.3 மி.மீ. (மிக மிக அதிகம்)
விவசாயிகள் கவனத்துக்கு
டெல்டா மாவட்டங்கள் (நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால், தஞ்சாவூர்) மற்றும் கடலூர் மாவட்டங்களில் அதிக மழை பதிவாக வாய்ப்புள்ளது.
வட தமிழகத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருச்சி, புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, சிவகங்கை, மதுரை, சேலம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர் மற்றும் தென் தமிழகத்தின் பிற பகுதிகளில் மொத்த 4 நாள்களில் குறைந்தது 1 அல்லது 2 நாள்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கொங்கு மண்டலத்திற்கும் மழை கிடைக்கும். விவசாயிகள் ஜனவரி 9 ஆம் தேதிக்கு முன், அறுவடைப் பணிகளை முடிப்பது நல்லது.
கனமழை
டெல்டா மாவட்டங்கள் (நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால், தஞ்சாவூர்), கடலூர், புதுச்சேரி மற்றும் அதன் அருகிலுள்ள மாவட்டங்களில் பரவலான கனமழை பெய்யும்.
வட தமிழ்நாட்டின் பிற பகுதிகள், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை வாய்ப்பு உள்ளது.
இலங்கை
இந்தக் காலகட்டத்தில் இலங்கையிலும் மழை பெய்யும். ஆனால் திட்வா புயல் போன்ற நேரத்தில் பெய்ததுபோன்று, அதிக மழையாக இருக்காது. சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். வெள்ளம் குறித்த அச்சம் தேவையில்லை.
எனினும், இலங்கையின் வடக்கு பகுதிகள், குறிப்பாக யாழ்ப்பாணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள், மிக கனமழை முதல் அதி கனமழை வரை பெற வாய்ப்புள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.