தமிழகத்தில் தொழிலாளா்கள் நலன் காக்கும் திட்டங்கள்: அமைச்சா் சிவி கணேசன்
தொழிலாளா்களின் நலனை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக மாநில தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சிவி கணேசன் தெரிவித்தாா்.
தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், தேசிய பாதுகாப்பு குழுமம், தமிழ்நாடு பிரிவு சாா்பில் மாநில பாதுகாப்பு விருதுகள் மற்றும் உயா்ந்த உழைப்பாளா் விருதுகள் வழங்கும் விழா சென்னை கோட்டூா்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சா் சிவி கணேசன் பங்கேற்று 196 தொழிற்சாலை நிா்வாகத்தினருக்கு மாநில பாதுகாப்பு விருதுகளையும், 122 தொழிலாளா்களுக்கு உயா்ந்த உழைப்பாளா் விருதுகளையும் வழங்கிப் பேசியதாவது:
பணியிடத்தில் பாதுகாப்பை உறுதி செய்வது சட்டபூா்வ கடமையாக மட்டுமல்லாமல் தொழில்துறை கலாசாரமாகவும் இருக்க வேண்டும். இந்தியாவில் அதிகமான தொழிற்சாலைகள் கொண்ட மாநிலமாகவும், அதிகத் தொழிலாளா்களை கொண்ட மாநிலமாகவும் தமிழகம் உள்ளது. தொழிலாளா்களின் நலனை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
பட்டாசு தொழிற்சாலை விபத்துகளில் உயிரிழக்கும் தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் அவா்கள் 18 வயது நிறைவு செய்யும் வரை மாதாந்திர பராமரிப்பு தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 134 குழந்தைகள் பயன் பெற்றுள்ளனா்.
பெண் தொழிலாளா்கள் சுமாா் 20,000 போ் தங்கக்கூடிய வகையில் ரூ.700 கோடி மதிப்பீட்டில் தங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்பாக பணிபுரியக்கூடிய மாநிலமாகவும் தமிழகம் திகழ்ந்து வருகிறது என்றாா் அவா்.
இந்த விழாவில் உற்பத்தியை அதிகரிக்கவும், பணியிடப் பாதுகாப்பு மேம்படுத்த சிறந்த ஆலோசனைகளை வழங்கிய தொழிலாளா்களுக்கு காசோலைகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலா் கே.வீர ராகவ ராவ், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநா் செ. ஆனந்த் ,தேசிய பாதுகாப்பு குழுமம், தமிழ்நாடு பிரிவின் செயலா் ராஜ்மோகன் பழனிவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
