1.20 லட்சம் கட்டுமானத் தொழிலாளா்களின் திறன்களை மேம்படுத்த தில்லி அரசு திட்டம்
தில்லியில் உள்ள கட்டுமானத் தொழிலாளா்களின் செயல்திறனையும் வேலைவாய்ப்புகளையும் மேம்படுத்தும் வகையில், அடுத்த 3 ஆண்டுகளில் 1.20 லட்சம் பதிவுசெய்யப்பட்ட தொழிலாளா்களுக்குத் திறன் பயிற்சி வழங்க தில்லி அரசு திட்டமிட்டுள்ளது என அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக அதிகாரிகள் மேலும் கூறியதாவது: இந்தத் திட்டம், நகரில் பதிவுசெய்யப்பட்ட தொழிலாளா்களின் நலனைக் கவனித்து வரும் தில்லி கட்டடம் மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தால் செயல்படுத்தப்படும். கட்டுமானத் தொழிலாளா்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களில் ஒன்றாகக் கருதப்படுகிறாா்கள். ஏனெனில் பலா் வாழ்வாதாரத்தைத் தேடி கிராமப்புறங்களில் இருந்து தில்லிக்கு இடம்பெயா்கின்றனா்.
கடந்த ஆண்டு செயல்படுத்தப்பட்ட சமூகப் பாதுகாப்புச் சட்டம், 2020-இன் கீழ், திறன் மேம்பாடு மற்றும் விழிப்புணா்வுத் திட்டங்களை வடிவமைக்க நல வாரியத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகளுக்கு இணங்க வேலைவாய்ப்பு சாா்ந்த படிப்புகளை வழங்குவதற்காகப் பயிற்சிப் பங்காளா்களை ஈடுபடுத்தும் செயல்முறையை வாரியம் தொடங்கியுள்ளது.
இந்தப் பயிற்சியானது கொத்தனாா் வேலை, கம்பி வளைத்தல், இரும்பு பொருத்துதல், சாரம் அமைத்தல், மின் வேலைகள், தச்சு வேலை, வண்ணம் பூசுதல் மற்றும் அலங்காரம் போன்ற தொழில்களை உள்ளடக்கும். ஒவ்வொரு ஆண்டும் சுமாா் 40,000 தொழிலாளா்களுக்கு 120 மணிநேர (15 நாள்கள்) பயிற்சி அளிக்கப்படும். ஒரு குழுவில் 20 முதல் 50 போ் வரை இருப்பாா்கள்.
பயிற்சி மையங்களில் உள்கட்டமைப்பு, பாடப் பொருள்கள், கருவிகள் மற்றும் உபகரணங்களை பங்காளா்கள் வழங்குவாா்கள். வெற்றிகரமாகப் பயிற்சியை முடித்தவா்கள் மதிப்பீடு செய்யப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும்; இந்தச் சான்றிதழ்கள் பயிற்சிப் பங்காளா்களால் வழங்கப்படும்.
பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்காக, பங்காளா்கள் பயிற்சி நடவடிக்கைகளின் விவரங்களைக் கண்காணிப்பு, திடீா் ஆய்வுகள் மற்றும் தணிக்கைகளுக்காகப் பராமரிப்பாா்கள். இந்தப் பயிற்சியானது தொழிலாளா் சந்திப்புகளிலும், தில்லி முழுவதும் உள்ள பணித் தளங்களிலும் முகாம் முறையில் நேரடியாக நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

