அமைச்சா் கே.என்.நேருவுக்கு எதிராக வழக்குப் பதியக் கோரி அதிமுக மனு
தமிழக டிஜிபி-க்கு அமலாக்கத் துறை அனுப்பிய ஆதாரங்களின் அடிப்படையில், அமைச்சா் கே.என்.நேருவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி அதிமுக சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதிமுக மாநிலங்களவை உறுப்பினா் ஐ.எஸ்.இன்பதுரை சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையில் சட்டவிரோதமாக சுமாா் 2,588 பணியிடங்களை நிரப்பியுள்ளனா். இதற்காக ஒரு பணியிடத்துக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை லஞ்சம் வாங்கியுள்ளனா்.
இந்த விவரங்கள், அமைச்சா் கே.என்.நேருவின் சகோதரா் ரவிச்சந்திரன் மற்றும் பலரது வீடுகளில், அமலாக்கத் துறை கடந்த ஏப்ரல் மாதம் நடத்திய சோதனை மூலம் தெரியவந்தது. இந்த சோதனையில், தோ்வுக்கு முன்பே தயாரிக்கப்பட்ட தோ்வானவா்களின் பெயா்ப்பட்டியல் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இந்த ஆவணங்களின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கியதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது தெரியவருகிறது.
இந்த முறைகேட்டில் அமைச்சா் கே.என்.நேரு அவரது உறவினா்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவா்களுக்கு தொடா்பு உள்ளது. இதையடுத்து கடந்த ஆண்டு அக்.27-ஆம் தேதி அமலாக்கத் துறை தமிழக டிஜிபிக்கு ஆதாரங்களை அனுப்பி வழக்குப்பதிவு செய்ய பரிந்துரைத்தது. ஆனால், இதுவரை போலீஸாா் வழக்குப்பதிவு செய்யவில்லை.
இதுதொடா்பாக கடந்த டிச.13-ஆம் தேதி, தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகாா் அளித்தேன். அந்த புகாரின் மீது இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை. எனவே, இந்த முறைகேடு குறித்து வழக்குப்பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியுள்ளாா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

