தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

அமித் ஷாவா? அவதூறு ஷாவா? - முதல்வர் ஸ்டாலின்

திண்டுக்கல் அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியது பற்றி...
Published on

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை புதன்கிழமை வழங்கினார்.

இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

”திண்டுக்கல் புரட்சியின் பெயர், எழுச்சியின் பெயர், வீரத்தின் பெயர். வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், பிரிட்டிஷுக்கு எதிராக போராடிய வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், ஊமைத்துரையும் தங்களின் அடுத்தக்கட்டப் போராட்டத்தை திட்டமிட்ட ஊர்தான் திண்டுக்கல்.

ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடிவிட்டு, பொங்கலை வரவேற்க காத்திருக்கும் உங்களுக்கு இனிப்பான சக்கரைப் பொங்கல் போன்ற அறிவிப்பை வெளியிட்டுவிட்டுதான் இங்கு வந்துள்ளேன்.

அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகள் கொள்முதல் செய்யப்பட்ட நெல் 1.79 கோடி மெட்ரிக் டன், ஆனால், திமுக ஆட்சியில் நாலரை ஆண்டுகளில் 1.99 கோடி மெட்ரிக் டன் கொள்முதல் செய்துள்ளோம்.

2019 ஆம் ஆண்டு முதல்வராக பழனிசாமி இருந்தபோது மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை நிறுத்திவிட்டார். தற்போது தமிழகத்தை சேர்ந்த 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுத்துள்ளோம்.

மக்கள் நலனுக்காக நாம் செய்யும் திட்டங்களை குறை சொல்ல முடியாதவர்கள் இல்லாத பிரச்னையை கூறி குளிர் காயலாம் என நினைக்கிறார்கள். அண்மையில் தமிழகத்துக்கு வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்து பேசியிருந்தார். அவர் அமித் ஷாவா? அவதூறு ஷாவா? என்ற சந்தேகம் வருகின்றது. அந்தளவுக்கு உண்மைக்கு புறம்பாக பேசியுள்ளார். தமிழகத்தில் இந்து சமய வழிபாடுகளுக்கு எதிராக அரசு செயல்படுகிறது எனப் பேசியுள்ளார். இதற்காக கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நமது அரசு பொறுப்பேற்ற பிறகு 4000 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தியுள்ளோம். பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த சோதனை செய்ததில்லை. கோயிலுக்குச் சொந்தமான 7,655 ஏக்கர் நிலத்தை மீட்டுள்ளோம். உண்மையாக பக்தர்கள் அரசை பாராட்டுகிறார்கள்.

எங்கள் ஆட்சியில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் செய்த பணிகளை பட்டியலிட்டால் ஒரு நாள் முழுவதும் பேசலாம். பக்தர்கள் விரும்பும் ஆட்சியாக திமுக ஆட்சி இருக்கின்றது. அனைத்து சமயத்தினருக்கு நம்பிக்கை விதைத்து மத உரிமையைக் காப்பாற்றும் ஆட்சியை நடத்தி வருகிறோம். துளியும் உண்மையில்லாத குற்றச்சாட்டை அமித் ஷா சொல்வது அவரது பதவிக்கு கண்ணியம் அல்ல. ஸ்டாலின் இருக்கும்வரை கலவரம் செய்ய நினைப்பவர்களின் எண்ணம் தமிழகத்தில் நடைபெறாது.

தமிழகத்தில் மோடி ஆட்சி வேண்டுமே? வேண்டாமா? என்று அமித் ஷா கேட்டுள்ளார். அதிமுக கூட்டணிக்கு வாக்களித்தால் தில்லியில் இருக்கும் பாஜகதான் ஆளும் என்பதை அமித் ஷா தெரிவித்துவிட்டுச் சென்றுள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் மறைமுக பாஜக ஆட்சி நடைபெற்றது.

மக்கள் திமுக பக்கம்தான் இருக்கிறார்கள். மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வருவோம். திராவிட மாடல் 2.0 இல் இன்னும் சாதனைகள் படைப்போம்” எனத் தெரிவித்தார்.

Summary

Chief Minister Stalin speech at the government event in Dindigul.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
திண்டுக்கல்லில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com