

தேனி மாவட்டம், தேவாரத்தில் பாண்டியர் குல வணிகர் சங்கம் சார்பில் தேவாரம் முதல் கேரள மாநிலத்தை இணைக்கும் சாக்கலூத்து மெட்டு மலைச்சாலை அமைக்க வலியுறுத்தி 2 ஆம் கட்டமாக கடை அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
தேவாரத்தில் தேனி மாவட்டம் தேவாரத்தில் இருந்து டி. மீனாட்சிபுரம் வழியாக கேரளத்தை இணைக்கும் 8 கி.மீ. தொலைவில் உள்ள சாக்கலூத்து மெட்டு மலைச்சாலையை அமைக்க கடந்த 44 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். ஆனால், இதுவரை அந்தப் பகுதியில் சாலையை அமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால், அண்டை மாநிலமான, கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள கட்டப்பனை நெடுங்கண்டம், பூப்பாறை போன்ற பகுதிகளுக்கு கூலி வேலைக்குச் செல்லும் இப்பகுதி மக்கள் நாள்தோறும் 150 கி.மீ. பயணம் செய்து திரும்பி வருகின்றனர்.
இந்த நிலையில் தேவாரத்தில் இருந்து டி. மீனாட்சிபுரம் வழியாக 8 கி.மீ. சாக்கலூத்து மெட்டு இணைப்புச் சாலை மூலமாக கேரளத்திற்கு எளிதில் சென்று விடலாம். மேலும் இரு மாநில வர்த்தக போக்கு அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. அதன்படி, கடந்த 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசிதழில் சாலை அமைப்பதற்கான அனுமதியை வெளியிடப்பட்டது. ஆனால் வனத்துறையினர் தொடர்ந்து முட்டுக்கட்டைப் போட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க. தமிழ்ச்செல்வன் , இச்சாலையின் முக்கியத்துவம் குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்ததோடு, டி. மீனாட்சிபுரத்தில் இருந்து சாக்கலூத்து மெட்டு வரை மலைச்சாலையில் நடைபயணம் மேற்கொண்டார். இந்தச் சாலை குறித்து நாடாளுமன்றத்திலும் அவர் பேசியிருந்தார்.
இதனிடையே, 44 ஆண்டுகளாக கிடைப்பில் போடப்பட்டுள்ள இச்சாலை திட்டப் பணியை மேற்கொள்ள வலியுறுத்தி தேவாரம் பாண்டியர் குல வணிக சங்கர் சார்பில் மைக்க வலியுறுத்தி முதல் கட்டமாக கடந்த மாதம் கண்டனம் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
ஆனாலும், அரசு எவ்வித நடவடிக்கை எடுக்காத நிலையில் தொடர்ந்து இரண்டாவது கட்டமாக இன்று(ஜன. 7) தேவாரத்தில் உள்ள காய்கறி, மளிகை, நகை, ஜவுளி உள்ளிட்ட அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டு சாலை அமைக்க வலியுறுத்தி கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காலை 6.00 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்றும், சாலை அமைக்க அரசு எவ்வித நடவடிக்கை எடுக்காத நிலையில் உண்ணாவிரத போராட்டம் என அடுத்தடுத்த போராட்டங்கள் தொடரும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.