

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை சந்தித்தது உண்மை என்று காங்கிரஸ் கட்சியின் தரவு பகுப்பாய்வுத் துறையின் தலைவரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு நெருக்கமானவருமான பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
எனினும், விஜய் உடனான சந்திப்பில் பேசப்பட்டவை தொடர்பாக பகிர்ந்துகொள்ள மறுத்துள்ளார்.
மேலும், விஜய்யை மீண்டும் சந்திக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கும் பதில் அளிக்காமல் விலகிச் சென்றுள்ளார்.
தமிழகத்தில் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கூட்டணி, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
காங்கிரஸ் கட்சி, திமுக கூட்டணியில் அங்கம் வகித்தாலும், காங்கிரஸின் ஒரு பிரிவினர் தவெகவுடன் கூட்டணி வைக்க விரும்புவதாகக் கூறப்படுகிறது. கரூர் சம்பவத்தின்போது விஜய்யிடம் ராகுல் காந்தி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய நிலையில், விஜய்யை சந்தித்து பிரவீன் சக்கரவர்த்தி பேசியிருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களுடன் பேசிய அவர், ஆட்சியில் அதிகாரம்கோருவது குறித்து கட்சி தலைமையே முடிவு செய்யும் எனக் குறிப்பிட்டார்.
மேலும், உத்தரப் பிரதேசத்துடன் தமிழகத்தை ஒப்பிடவில்லை என்றும் தமிழகத்தின் நிதி நிலைமை குறித்து ரிசர்வ் வங்கி கூறிய கருத்துகளையே முன்வைத்தேன் எனவும் சுட்டிக்காட்டினார்.
உத்தரப் பிரதேசத்தைவிட தமிழகத்தின் கடன் தொகை அதிகமாகவும், கவலைக்கிடமான நிலைமையில் இருப்பதாக பிரவீன் சக்கரவர்த்தி கருத்து தெரிவித்திருந்தார். இவரின் பேச்சை சுட்டிக்காட்டி திமுக - காங்கிரஸ் கூட்டணியை பாஜக தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர். காங்கிரஸ் எம்பிக்களும் பிரவீன் சக்கரவர்த்தி கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.