50,000 தன்னார்வலர்கள் ஈடுபடும் உங்க கனவ சொல்லுங்க திட்டம்: நாளை தொடக்கம்!

உங்க கனவ சொல்லுங்க திட்டத்தை தொடக்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்.
முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்கோப்புப்படம்
Updated on
2 min read

“உங்க கனவ சொல்லுங்க“ எனும் புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (ஜன. 9) திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, பாடியநல்லூரில் தொடக்கி வைக்கிறார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுவரை, தமிழ்நாட்டில் உள்ள கடைகோடி மக்கள் வரை பயன்பெறும் வகையில் பல்வேறு சமூக நலத் திட்டங்களை அறிவித்து வெற்றிகரமாக செயல்படுத்தி அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள்/திட்டங்கள் அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்கி வருகிறது.

நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்த மக்களின் தேவைகளான பட்டா மாறுதல், சாதி சான்றிதழ், வருவாய்த் துறை சான்றிதழ்கள், மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு அதற்கான பெயர் மாற்றங்கள், சாலை வசதிகள், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் முகாம்கள் நடத்தப்பட்டு தீர்க்கப்பட்டுள்ளன.

மேலும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, மகளிருக்கான விடியல் பயணத் திட்டம், மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டம், மாணவர்களுக்கு தமிழ்ப் புதல்வன் திட்டம், திறன் மேம்பாட்டிற்கான “நான் முதல்வன்” திட்டம், முதியோர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியம், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாம்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம், முதியோர்களுக்கான அன்புச்சோலை திட்டம், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்” போன்ற பல்வேறு திட்டங்களை இவ்வரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் அமல்படுத்தப்பட்ட பல்வேறு அரசு திட்டங்களில் பயனடைந்துள்ள பயனாளிகளின் தரவுகள் மற்றும் விவரங்களை உறுதிப்படுத்தவும், திட்டங்களின் தற்போதைய செயல்பாட்டு நிலை குறித்து பொதுமக்களின் கருத்தினை அறியவும், மக்களின் எதிர்கால கனவுகள் மற்றும் தேவைகளைக் கண்டறியவும், அவர்களது வசிப்பிடங்களுக்கே சென்று நேரடியாக அறிந்து கொள்ளும் "உங்க கனவ சொல்லுங்க" என்ற திட்டத்தினை செயல்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

"உங்க கனவ சொல்லுங்க" திட்டத்தில், தமிழ்நாட்டில் உள்ள சுமார் 1.91 கோடி கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள குடும்பங்களை சந்தித்து, அவர்கள் பயன்பெற்ற திட்டங்கள் மற்றும் கனவுகளை 50,000 தன்னார்வலர்களை ஈடுபடுத்தி கண்டறிய எடுக்கப்படும் முன் மாதிரி முயற்சியாகும். இந்த களப்பணி தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்படும்.

இப்பணிக்காக மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த சுமார் 50,000 உறுப்பினர்கள் தன்னார்வலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இப்பணிகளை மேற்கொள்ள உரிய பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்துகளை பதிவு செய்ய தமிழ்நாடு மின்-ஆளுமை முகமை (TNeGA) மூலம் தனியாக கைபேசி செயலி இதற்கென உருவாக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் செயலாக்கம் குறித்த விவரங்கள் அனைத்து ஊரகம் மற்றும் நகர்ப்புறப் பகுதிகளிலும், நாளிதழ்கள், சமூக ஊடகங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் முன்கூட்டியே முறையாக விளம்பரப்படுத்தப்பட்டு, விழிப்புணர்வு பணிகளை செய்தி மக்கள் தொடர்புத் துறை ஒருங்கிணைக்கும்.

தன்னார்வலர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் இரண்டு முறை செல்வர். முதல் முறை வீட்டிற்கு செல்லும் போது விண்ணப்ப படிவத்தினை குடும்பத் தலைவர் / உறுப்பினரிடம் வழங்குவர். அவ்விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள அரசு திட்டங்களின் பெயர் பட்டியல் விவரங்களை அவர்களிடம் தெரிவித்து, படிவத்தினை பூர்த்தி செய்து தரும்படி கோருவர்.

தன்னார்வலர்கள், இரண்டு நாள்களுக்குப் பிறகு ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தினை சரிபார்த்து கைபேசி செயலியில் பதிவேற்றம் செய்வர். கைபேசி செயலியில் பதிவேற்றியப் பின்னர் அக்குடும்பத்திற்கு தனித்துவமான அடையாள எண்ணுடன் கூடிய கனவு அட்டையினை வழங்குவர். இந்த அட்டை மூலம் www.uks.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது கனவு / கோரிக்கையின் நிலை குறித்து தெரிந்துக் கொள்ளலாம்.

முதல்வர் ஸ்டாலின் "உங்க கனவ சொல்லுங்க" திட்டத்தினை நாளை (ஜன. 9) திருவள்ளுர் மாவட்டம், பொன்னேரி வட்டம், பாடியநல்லூரில் தொடங்கி வைக்க உள்ளார்.

அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் அமைச்சர்களால் அன்றைய நாளே தொடங்கி வைக்கப்படும். இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு திட்டங்களின் பயனாளிகள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Chief Minister M.K. Stalin will launch the new scheme "Tell Us Your Dream" tomorrow (Jan. 9) in Padiyanallur, Ponneri, in Tiruvallur district.

முதல்வர் ஸ்டாலின்
தொழில்நுட்பம் அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com