

கரூர் : சென்னையிலிருந்து கரூருக்கு கொண்டுவரப்பட்ட நடிகரும் தவெக தலைவருமான விஜய் மக்கள் பிரசாரத்தின் போது பயன்படுத்தப்பட்ட பேருந்தை, மத்திய உள்துறை அமைச்சக மற்றும் தடவியல் துறை, சிபிஐ அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கரூரில் தேர்தல் பிரசாரத்தின்போது பயன்படுத்தப்பட்ட பேருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கரூரில் தவெக பிரசாரத்தின்போது விஜய் பயன்படுத்திய பிரசார வாகன பேருந்து பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் கரூரில் அந்தப் பேருந்தினை சிபிஐ அதிகாரிகள் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் தடவியல் துறை அதிகாரிகள் சனிக்கிழமை காலை ஆய்வு செய்தனர்.
மேலும் பேருந்து ஓட்டுனரிடமும் சம்பவம் நடந்தது பற்றி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
கரூரில் கடந்த ஆண்டு செப். 27ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 110 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோக்கி தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது விஜய் பிரசாரத்திற்காக பயன்படுத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணைக்காக வாகன ஓட்டுநருடன் கரூருக்கு சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் கொண்டுவரப்பட்டது.
அங்கு கரூர் பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் ஏற்கனவே தங்கியிருக்கும் சிபிஐ அதிகாரிகள் மற்றும் வெள்ளிக்கிழமை கரூர் வேலுச்சாமிபுரத்தில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்த மத்திய உள்துறை அமைச்சகத்தின் தடவியல் துறை அதிகாரிகள் ஆகியோர் பேருந்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து பேருந்துக்குள் அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனர். பின்னர் பேருந்து ஓட்டுநரிடம் பேருந்தினை முன்பின் இயக்குமாறு அறிவுறுத்தினர். தொடர்ந்து பேருந்தின் ஓட்டுனரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விஜய்க்கு வரும் 12ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சிபிஐ அதிகாரி சார்பில் சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் தற்போது விஜய் பயன்படுத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.