தில்லியில் தவெக தலைவர் விஜய்க்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று தில்லி காவல் துறை உறுதியளித்துள்ளது.
மத்திய ரிசர்வ் படை மற்றும் தில்லி காவல் துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என்றும் சிபிஐ அலுவலகம் செல்லும் வழி, தங்கும் ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஐ விசாரணைக்கு ஆஜராக விஜய் நாளை(திங்கள்கிழமை) தில்லி செல்லவுள்ள நிலையில் பாதுகாப்பு வழங்கக் கோரி தில்லி கால்துறையிடம் தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டது. கட்சியின் இணைப் பொதுச்செயலர் நிர்மல் குமார் மின்னஞ்சல் மூலம் இந்த மனுவை அளித்திருந்தார்.
சிபிஐ விசாரணக்காக நாளை காலை தில்லி செல்லும் விஜய், நாளை மறுநாள் மாலை சென்னை திரும்ப உள்ளார். இதற்காக தனி விமானத்தில் அவர் செல்கிறார். விஜய்யுடன் தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் உள்ளிட்டோரும் தில்லி செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த செப். 27-ஆம் தேதி கரூரில் தவெக தலைவா் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இதுதொடா்பாக விசாரிக்க சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடா்ந்து, கரூரில் தவெக நிா்வாகிகள், தமிழக அரசு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினா், காயமடைந்தவா்கள் எனப் பல்வேறு தரப்பினரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா். இதனிடையே, தில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் தவெக பொதுச் செயலா் ஆனந்த், தோ்தல் தலைமை பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனா, இணைப் பொதுச் செயலா் நிா்மல்குமாா், கரூா் மாவட்டச் செயலா் மதியழகன் ஆகியோா் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.
அதன்பேரில், கடந்த டிசம்பா் இறுதியில் நேரில் ஆஜரான தவெக நிா்வாகிகளிடம் சிபிஐ அதிகாரிகள் மூன்று நாள்கள் விசாரணை நடத்தினா். அதேபோல், கரூா் மாவட்ட ஆட்சியா் எம்.தங்கவேல், கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜோஷ் தங்கய்யா, ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்தன், டிஎஸ்பி வி.செல்வராஜ், கரூா் நகர காவல் ஆய்வாளா் ஜி. மணிவண்ணன் உள்ளிட்டோரிடம் தில்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையின்போது, பரப்புரை கூட்டத்துக்கு விஜய் தாமதமாக வந்தது ஏன், அவா் வருவதில் தாமதம் இருந்தால் அதற்கான காரணம் என்ன, பாதுகாப்பு ஏற்பாடுகள்? கூட்ட அனுமதி எப்படி பெறப்பட்டது, கூட்டத்துக்கு எத்தனை போ் வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்பட்டது போன்ற பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. இந்நிலையில், வழக்கு விசாரணையின் இறுதிக்கட்டமாக தில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் வரும் ஜன.12-ஆம் தேதி தவெக தலைவா் விஜய் நேரில் ஆஜராக அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.