திமுகவின் சட்டப் பேரவைத் தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினா் ஓசூர் வருகை புரிந்துள்ளனர்.
அடுத்த ஐந்தாண்டுகளுக்கான வளர்ச்சியைத் திட்டமிட 'திமுக அரசு 2.0' தயாராகி வருகிறது. இந்த புதிய பயணத்திற்கான தேர்தல் அறிக்கையில் மக்களின் குரலாக இருக்க வேண்டும் என்கிற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் விருப்பப்படி ஒவ்வொரு தமிழ்நாட்டு குடிமகனின் தேவையையும் பிரதிபலிக்கும் வகையில், மக்கள் பங்கேற்புடன் கூடிய ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் அறிக்கையை உருவாக்க திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு தயாராகி வருகிறது.
திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைபடியும், கட்சி இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி 2026 சட்டப் பேரவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கட்சி துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி., தலைமையில் டி.கே.எஸ்.இளங்கோவன், முனைவர் கோவி.செழியன், முனைவர் டி.ஆர்.பி. ராஜா, எம்.எம். அப்துல்லா, பேரா. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், மருத்துவர் எழிலன் நாகநாதன், கார்த்திகேய சிவசேனாபதி, ஆ.தமிழரசி ரவிக்குமார், ஜி.சந்தானம் ஐ.ஏ.எஸ். சுரேஷ் சம்பந்தம் ஆகிய 12 பேர் அடங்கிய குழுவினர் திங்கள்கிழமை ஓசூர் வந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், ஒசூரில் மாநகராட்சியில் உள்ள ஆனந்த் கிராண்ட் பேலஸ் திருமண மண்டபத்தில் பொதுமக்கள், உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் அவர்கள் சந்தித்து தேர்தல் அறிக்கைக்கான பரிந்துரைகளைக் கேட்டு வருகின்றனர். தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவிடம் ஓசூர் சிறு மற்றும் குறுந் தொழிற்சாலைகள் சங்கத்தின் தலைவர் மூர்த்தி, செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் வடிவேலு அடங்கிய குழுவினர் (ஹோஸ்டியா) பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது, ஓசூரில் பன்னாட்டு விமான நிலையத்தை தொடங்க வேண்டும், ஓசூர் முதல் ஜோலார்பேட்டை வரை ரயில் பாதையை அமைத்து அதில் சென்னை பெங்களூர் இடையே ரயில் சேவை தொடக்க வேண்டும், தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தொழிற்சாலைகளுக்கான சொத்து வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன.
மேலும் வணிகர் சங்கங்கள், விவசாயிகளின் பிரதிநிதிகள், தொழிற்சங்கங்கள், தொழில் முனைவோர், மாணவர் சங்கங்கள், கல்வியாளர்கள், அரசு ஊழியர்களின் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருடனும் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் சந்திப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் ஓசூர் எம்எல்ஏ ஒய் பிரகாஷ், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் பர்கூர் எம்எல்ஏ மதியழகன், ஓசூர் மாநகர மேயர் எஸ். ஏ.சத்யா. முன்னாள் எம்எல்ஏ பி. முருகன் தர்மபுரி மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.