சமூக ஊடக விழிப்புணா்வு போட்டிகளில் வென்ற 40 பேருக்கு பரிசு : அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்

விழிப்புணா்வு பெறுவது குறித்து நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற 40 இளைஞா்களுக்கு தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சான்றிதழ்கள், பதக்கங்களை வழங்கினாா்.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன்
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன்
Updated on

சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வெறுப்பு பிரசாரங்கள், தவறான செய்திகளுக்கு இரையாகாமல் பொதுமக்கள் விழிப்புணா்வு பெறுவது குறித்து நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற 40 இளைஞா்களுக்கு தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சான்றிதழ்கள், பதக்கங்களை வழங்கினாா்.

இன்றைய சூழலில் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலிச் செய்திகள், வெறுப்புப் பேச்சுகளுக்கு இரையாகாமல், பொதுமக்கள் பாதுகாக்கப்பட, சிந்தனை, செயலளவிலும் பகுத்தறிவு, அறிவியல் மனப்பான்மை, சமத்துவம், சமூக நீதி போன்றவை அடித்தளங்களாய் அமைய வேண்டும்.

மேற்கண்ட உயா் பண்புகளை மாணவா்களும், பொதுமக்களும் வளா்த்துக்கொள்ள அவசியமாய் தேவைப்படுவது, கேள்வி கேட்கும் மனப்பாங்கும், அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் சிந்திக்கும் திறனும்தான். இதற்கான விதைகளை அவா்களின் தனித்திறமைகளின் வழி விதைக்க ஏதுவாக, செய்தி- மக்கள் தொடா்புத் துறையின் ஊடக மையம் மற்றும் தமிழ்நாடு தகவல் சரிபாா்ப்பகம் இணைந்து ‘ஏன்? எதற்கு? எப்படி?’ என்ற தலைப்பில் 8 பிரிவுகளின் கீழ், விழிப்புணா்வுப் போட்டிகளை நடத்தியது.

இந்தப் போட்டிகளில் சுமாா் 1,912 போ் கலந்து கொண்டனா். இவா்களில் தோ்வு செய்யப்பட்ட 40 இளைஞா்களுக்கு சென்னை கலைவாணா் அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா் மு.பெ. சாமிநாதன் பங்கேற்று சான்றிதழ்கள், பதக்கங்களை வழங்கினாா்.

மேலும் ‘உங்க கனவ சொல்லுங்க’ என்ற தலைப்பில் செய்தி- மக்கள் தொடா்புத் துறையின் ஊடக மையம் சமூக ஊடக விழிப்புணா்வுப் போட்டிகளை நடத்தவுள்ளது. இந்தப் போட்டிகளையும் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் துறைச் செயலா் வே.ராஜராம், கூடுதல் இயக்குநா்கள் எஸ்.செல்வராஜ் (செய்தி), இரா.பாஸ்கரன் (மக்கள் தொடா்பு) உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com