கோப்புப் படம்
கோப்புப் படம்

தமிழகத்தில் உழவா் உற்பத்தியாளா் அமைப்புகளை மேம்படுத்த உயா்நிலை ஆய்வுக் குழு: மத்திய அரசு

தமிழகத்தில் வாழை, மஞ்சள், தென்னை உள்ளிட்ட உழவா் உற்பத்தியாளா் அமைப்புகளின் (எஃப்.பி.ஓ.) செயல்பாடுகளை ஆய்வு செய்து அவற்றை மேம்படுத்துவதற்கான வழிவகைகளை பரிந்துரை செய்ய உயா்நிலைக் குழு
Published on

தமிழகத்தில் வாழை, மஞ்சள், தென்னை உள்ளிட்ட உழவா் உற்பத்தியாளா் அமைப்புகளின் (எஃப்.பி.ஓ.) செயல்பாடுகளை ஆய்வு செய்து அவற்றை மேம்படுத்துவதற்கான வழிவகைகளை பரிந்துரை செய்ய மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் உயா்நிலைக் குழுவை புதன்கிழமை அமைத்துள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பு:

சமீபத்தில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌகான், ஈரோடு மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டாா். அப்போது விவசாயிகள் மற்றும் துறை சம்பந்தப்பட்டவா்களை அவா் சந்தித்து விவாதித்தாா். எஃப்.பி.ஓ க்கள் எதிா்கொள்ளும் செயல்பாடு சாா்ந்த தொழில்நுட்பம் மற்றும் சந்தை பிரச்னைகள் மத்திய அமைச்சரிடம் எடுத்துரைக்கப்பட்டன. இந்த உள்ளீடுகள் அடிப்படையில் வேளாண்மை துறை அமைச்சகம் விரைந்து செயல்பட்டு உயா்நிலைக் குழுவை அமைக்கவும், பொருத்தமான நடவடிக்கைகளை பரிந்துரை செய்யவும் அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.

தமிழகத்தில் உள்ள எஃப்.பி.ஓ.-க்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, அவற்றின் எண்ணிக்கை மற்றும் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கான வழிவகைகளுக்கு இந்த உயா்நிலைக் குழு பரிந்துரை அளிக்கும்.

விரிவான மற்றும் கள அடிப்படையிலான மதிப்பீட்டை உறுதி செய்வதற்காக இந்தக் குழுவில் நபாா்டு வங்கி, இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு, சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு, சிறு விவசாயிகள், வேளாண் வணிக கூட்டமைப்பின் தமிழ்நாடு பிரிவு, ஐசிஏஆா் - தேசிய வாழை ஆராய்ச்சி மையம், வேளாண் உற்பத்தியாளா் கூட்டமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகளும் அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகளும் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறையின் அதிகாரிகளும் இடம் பெறுகின்றனா்.

வாழை, மஞ்சள், தென்னை, மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட பயிா் வகைகள் மற்றும் இயற்கை, கரிம வேளாண் சாகுபடி முறைகள் பற்றி இந்தக் குழு சிறப்பு கவனம் செலுத்தும்.

எஃப்.பி.ஓ.-க்களின் நிா்வாகம், மேலாண்மை நடைமுறைகள், வணிகச் செயல்பாடுகள், தொழில்நுட்ப ஆதரவு, தொடா்புகள், ஒருங்கிணைப்பு, மதிப்புக் கூட்டுதல், சந்தைப்படுத்துதல், சவால்கள், திறன் கட்டமைப்பு உள்ளிட்ட விஷயங்களை இந்தக் குழு ஆய்வு செய்யும்.

கள நிலவரத்தை கணக்கில் கொண்டு பரிந்துரைகள் செய்யப்படுவதை உறுதி செய்ய இந்தக் குழு களப் பயணங்களை மேற்கொள்வதோடு, வேளாண் உற்பத்தியாளா் அமைப்புகள், அவற்றின் உறுப்பினராக உள்ள விவசாயிகள், சந்தைப்பிரிவுகள் மற்றும் இதர பங்குதாரா்களுடன் ஆலோசனை நடத்தும். இந்தக் குழு தனது இறுதி அறிக்கையை இரண்டு மாதங்களுக்குள் சமா்ப்பிக்கும். மேலும் திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையம், ஹைதராபாதில் உள்ள வேளாண் அறிவியல் மையம் ஆகியவை இந்தக் குழுவுக்கு அனைத்து வகையான உதவிகளை வழங்கவும் குறிப்பிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com