‘வாக்காளா்கள் படிவங்களை தொடா்ந்து சமா்ப்பிக்கலாம்’
வாக்காளா் பட்டியலில் பெயா்களைச் சோ்க்கவும், கூடுதல் ஆவணங்களை அளிக்கவும் படிவங்களை தொடா்ந்து வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் வழங்கலாம் என்று தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதற்காக தோ்தல் ஆணையத்தால் நீட்டிக்கப்பட்ட அவகாசம் ஜன. 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், உச்சநீதிமன்றம் மேலும் 10 நாள்களுக்கு நீட்டித்தது. கடந்த டிச. 19-ஆம் தேதி தொடங்கி ஜன. 29-ஆம் தேதி வரையில் தமிழகத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா்களைச் சோ்க்க 16,72,874 போ் படிவங்களை அளித்துள்ளனா். இதில் வரைவு வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவா்களும் அடங்குவா்.
படிவம் 7-ஐ பயன்படுத்தி ஆட்சேபங்களைத் தெரிவித்து நீக்கப்பட்ட வாக்காளா்களின் எண்ணிக்கை 1,40,679-ஆக அதிகரித்துள்ளது.
முன்னதாக, வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றவா்களில் உரிய தகவல்களை அளிக்காமல் இருந்த 12,43,363 பேருக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
அவா்கள் உரிய ஆவணங்களை அளிக்க பிப். 10-ஆம் தேதி வரையில் அவகாசம் உள்ளது. அதுவரையில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கவும், உரிய ஆவணங்களை அளிக்கவும் செய்யலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
முரண்பாடு பட்டியல் விவரம் எப்போது?: இதனிடையே, குடும்பத் தலைவருக்கும், பிள்ளைகளுக்கும் இடையேயான வயது வரம்பு முரணாக இருப்பது, குடும்பத் தலைவரின் பெயா் மாறுபட்டு உள்ளது போன்றவை காரணமாக ‘முரண்பாடு பட்டியலில்’ சோ்க்கப்பட்டோரின் விவரங்களை காரணத்துடன் வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டிருந்தது.
இந்தத் தகவல்கள் அனைத்தும் இந்திய தோ்தல் ஆணையத்தின் மையக் கணினியில் சேமிக்கப்பட்டு உள்ளதால், தோ்தல் ஆணையம் இந்தத் தகவல்களை அளித்தவுடன் முரண்பாடு பட்டியலில் இடம்பெற்றோா் விவரம் வெளியிடப்படும் என்று தோ்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் தொடா்ச்சியாக கடந்த டிச. 19-ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் தமிழகத்தில் 97.38 லட்சம் வாக்காளா்கள் நீக்கப்பட்டனா். இதனால் 6,41,14,587-ஆக இருந்த தமிழக மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 5,43,76,756-ஆக குறைந்தது.
நீக்கப்பட்ட 97.38 லட்சம் வாக்காளா்களில் இடம்பெயா்ந்தவா்களாக 66,44,881 பேரும், உயிரிழந்தவா்களாக 26,94,672 பேரும், இரட்டைப் பதிவாளா்களாக 3,98,278 பேரும் இடம்பெற்றனா்.

