முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் தலைகுனிந்து நிற்கும் தமிழகம்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் தமிழகம் தலைகுனிந்து நிற்பதாக அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி.
எடப்பாடி பழனிசாமி. கோப்புப்படம்.
Updated on
2 min read

முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் தமிழகம் தலைகுனிந்து நிற்பதாக அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துளள அறிக்கையில், உலக சரித்திரத்தில் ஹிட்லர், முசோலினி, நீரோ போன்ற கொடுங்கோல் மன்னர்களைப் பற்றி மக்கள் கேள்விப்பட்டிருப்பார்கள்; சரித்திரப் புத்தகங்களில் படித்திருப்பார்கள். ஆனால், இந்த சர்வாதிகாரிகளின் மொத்த உருவமாக, தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலினை தமிழக மக்கள் பார்க்கிறார்கள்.

`நடு இரவில் ஒரு பெண் தனியாக, பாதுகாப்பாக நடந்துசெல்கிறாரோ அன்றுதான் உண்மையான சுதந்திரம் பெற்ற நாள்’ என்று மகாத்மா காந்தி கூறினார். ஆனால், கடந்த 56 மாத தி.மு.க. ஆட்சியில் காவல் துறையை தனது ஏவல் துறையாக, முதலமைச்சர் ஸ்டாலின் மாற்றி வைத்துள்ளதால் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. 6 வயது சிறுமி முதல் மூதாட்டிகள் வரை ரோட்டில் நடந்து செல்ல முடியவில்லை. போதை ஆசாமிகள் எந்த நேரம் இவர்களை சீரழிப்பார்கள், கொலை செய்வார்கள் என்று தெரியவில்லை. இந்நிலையில், தீய சக்தி தி.மு.க-வின் ஆட்சி முடிவுக்கு வரும் நிலையில், `ரோம் நகரம் பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போல்’ மகளிர் மாநாடு நடத்துகிறார்.

56 மாதங்களாக நிர்வாகத் திறனற்ற ஆட்சி செய்து, இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாக தமிழ் நாட்டை மாற்றிவிட்டு, நிதியே இல்லாமல் மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு, கோடிக்கணக்கான ரூபாய்க்கான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

சென்னை தரமணியில் வெளி மாநில இளம்பெண், போதை ஆசாமிகளால் சீரழித்து கொல்லப்பட்டுள்ளார். கண்முன்னே மனைவி பலாத்காரம் செய்யப்படுவதை தடுத்த கணவனும்; இந்த கொடுஞ்செயலைப் பார்த்து அழுத இரண்டு வயது குழந்தையும் அடித்து கொல்லப்பட்டிருக்கிறார்கள். சென்னையில் உள்ள நந்தனம் அரசு கலைக் கல்லூரி கேன்டீனில் பணியாற்றும் அரியலூரைச் சேர்ந்த பெண், திமுக பிரமுகரால் சீரழிக்கப்பட்டுள்ளதோடு; அவரது நண்பர்களுக்கும் விருந்தாக்கப்பட்டுள்ள கொடுமை அரங்கேறியுள்ளது. கொடுஞ்செயலில் ஈடுபடுபவர்களுக்கு போலீசை கண்டு பயமில்லாத நிலை இருப்பதற்கு ஆட்சியாளர்களின் செயல்பாடுகளே காரணம்.

குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு ஏதாவது ஒரு வகையில் ஆளும் கட்சியினர் அடைக்கலம் அளிப்பதுதான், தற்போது தமிழகம் குற்றவாளிகளின் கூடாரமாக மாறி உள்ளதற்குக் காரணம் என்று அவதியுறும் மக்கள் புலம்புகிறார்கள். பெருநகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை தடை இல்லாமல் போதைப் பொருட்கள் கிடைப்பதும், அவைகளை கொண்டு செல்வதில் ஆளும் கட்சியினரில் சிலர் ஈடுபட்டு வருவதும், பெரும் சீரழிவுக்கு காரணமாக உள்ளது. பள்ளி சிறுவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை, போதையின் பிடியில் சிக்கி குற்றச் செயல்களில் ஈடுபடுவதும், பள்ளி மாணவிகளில் சிலர் சீருடையிலேயே மது அருந்துவது போன்ற காணொளிக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாவதும், தி.மு.க-வினர் நடத்தும் ஆட்சியின் லட்சணத்தைப் பறை சாற்றுகிறது.

சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைக் கண்டித்து வீதியில் இறங்கி நாள்தோறும் போராடி வருகிறார்கள்! போராடுபவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு பதில், அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கும் வேலையில்தான் முதலமைச்சர் ஸ்டாலினின் திமுக அரசு ஈடுபட்டுள்ளது. பல லட்சம் கோடி ரூபாய் மக்களின் வரிப் பணத்தை கொள்ளையடித்து தங்கள் பரம்பரையின் வாழ்வை மட்டுமே வளப்படுத்தும் நோக்கில், அல்லும் பகலும் `கரப்ஷன், கமிஷன், கலக்ஷன்’ என்று செயல்படும் ஸ்டாலினின் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு கட்டும் காலம் நெருங்கிவிட்டது. திமுக-வின் கொடுங்கோல் ஆட்சியால் அல்லல்பட்ட மக்கள் அதை பொறுக்கமாட்டாது அழுத கண்ணீரே ஓர் அரசனின் செல்வத்தை அழிக்கும் படை ஆகும் என்பதை,

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே

செல்வத்தைத் தேய்க்கும் படை...

என்று, இரு வரிகளில் திருவள்ளுவர் கூறியிருப்பதை, தன்னிலை மறந்து செயல்படும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நினைவூட்டுகிறேன். நம்மை கேள்வி கேட்க யாருமில்லை; நம்மை வெல்லும் சக்தி எங்குமில்லை என்ற மமதையோடு சுற்றித் திரியும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே,

`ஏய்ப்பவர்க்கே காலம் என்று எண்ணி விடாதே,

பொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்து விடாதே..

ஒரு நாள் இந்த நிலைமைக்கெல்லாம் மாறுதல் உண்டு,

அந்த மாறுதலை செய்வதற்கு தேறுதல் (தேர்தல்) உண்டு’

என்ற புரட்சித் தலைவரின் பாடல் வரிகளையும் நினைவூட்டுகிறேன்.

விரைவில் தேர்தலை தமிழகம் சந்திக்கும்; மக்கள் மாறுதலை தருவார்கள்.

ஏய்த்து பிழைக்கும் தொழிலை இதுநாள்வரை செய்து வந்த தீயசக்தி தி.மு.க. கூட்டம் மூலைக்கு மூலை அடக்கி ஒடுக்கி வைக்கப்படும். தமிழக மக்கள் குறிப்பாக பெண்கள் சுதந்திரம் பெறுவார்கள். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Summary

AIADMK General Secretary Edappadi Palaniswami has said that Tamil Nadu is bowing its head under Chief Minister Stalin's rule.

எடப்பாடி பழனிசாமி.
எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வரப் போவதில்லை - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com