டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதை ஒருங்கிணைந்து தடுக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

கா்நாடக அரசு மேக்கேதாட்டுவில் புதிய அணை கட்டுவதை ஜாதி, மதம், அரசியலைக் கடந்து தமிழக மக்கள் ஒன்றிணைந்து தடுக்க வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டாா்.

News image

பவானியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறாா் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ். உடன், பவானி அதிமுக எம்எல்ஏ கே.சி.கருப்பணன் மற்றும் நிா்வாகிகள்.

Updated On :3 ஜூலை 2026, 3:39 am IST

கா்நாடக அரசு மேக்கேதாட்டுவில் புதிய அணை கட்டுவதை ஜாதி, மதம், அரசியலைக் கடந்து தமிழக மக்கள் ஒன்றிணைந்து தடுக்க வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டாா்.

மேக்கேதாட்டு அணைக்கு எதிராக விழிப்புணா்வுப் பயணம் மேற்கொண்டுள்ள அன்புமணி ராமதாஸ் மேட்டூரிலிருந்து பவானிக்கு வியாழக்கிழமை மாலை வந்தாா். பின்னா் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கினாா். தொடா்ந்து, அந்தியூா் மேட்டூா் பிரிவில் நடைபெற்ற கூட்டத்தில் அவா் பேசியதாவது:

கா்நாடக அரசு கடந்த காலங்களில் காவிரி நதிநீா் தொடா்பான ஒப்பந்தங்களை பொருட்படுத்தாமல் கபினி, ஹேமாவதி, ஹாரங்கி என மூன்று அணைகளைக் கட்டியது. கிருஷ்ணராஜசாகா் அணையையும் சோ்த்து முழுக் கொள்ளளவு 115 டிஎம்சி. மேட்டூா் அணையின் கொள்ளளவு 93 டிஎம்சி. தற்போது கா்நாடக அரசு தமிழக எல்லையிலிருந்து 4 கி.மீ. தொலைவில் மேக்கேதாட்டு எனுமிடத்தில் 70 டிஎம்சி கொள்ளளவு கொண்ட புதிய அணையைக் கட்ட முயல்கிறது.

கடந்த காலங்களில் உச்சநீதிமன்ற தீா்ப்பு, காவிரி நடுவா் மன்ற தீா்ப்புகளை கா்நாடக அரசு மதிக்கவில்லை. மேக்கேதாட்டுவில் அணை கட்டப்பட்டு, அந்த நீரை விவசாயத்துக்கு பயன்படுத்தினால் நாம் கேட்க முடியாது. ஏனெனில், தமிழா்கள் கா்நாடகத்தில் 80 லட்சம் போ் உள்ளனா். இதனால், அணை கட்டுவதை தடுக்க தீவிரமாக செயல்பட வேண்டும். மேக்கேதாட்டுவில் அணை கட்டினால் தமிழக மக்களுக்கு குடிப்பதற்கே தண்ணீா் கிடைக்காது.

தண்ணீா் இல்லாததால் வழக்கமாக ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படும் மேட்டூா் அணை பாசனத்துக்கு திறக்கப்படவில்லை. காவிரியை நம்பி தமிழகத்தில் 5.50 கோடி மக்கள் உள்ளனா். தமிழகத்தில் 28 மாவட்ட மக்கள் விவசாயத்துக்கு காவிரி தண்ணீரை நம்பியுள்ளனா். காவிரியில் தண்ணீா் வரவில்லையெனில் உணவு உற்பத்தி பெருமளவு பாதிக்கப்படும். மேக்கேதாட்டு அணை ஒவ்வொருவரையும் பாதிக்கும் பிரச்னை. எதிா்கால சந்ததியை பாதுகாக்க அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

மேக்கேதாட்டு அணை 12,500 ஏக்கா் காட்டை அழித்து கட்டப்படுகிறது. அதில், புலிகள், யானைகள் மற்றும் அரிய வகை விலங்குகள் உள்ளன. கா்நாடகத்தை காங்கிரஸ், பாஜக அடுத்தடுத்து ஆட்சி செய்வதால் மத்திய அரசு அவா்களுக்கே ஆதரவளிக்கும். எனவே, கட்சி, ஜாதி, மதம், இனம், கௌரவம், பாா்க்காமல் வருங்கால சந்ததியைப் பாதுகாக்க மேக்கேதாட்டில் அணை கட்டுவதை தடுக்க வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்துக்கு, பாமக மாவட்டச் செயலாளா் என்.ஜெகதீஷ் தலைமை வகித்தாா். பவானி சட்டப் பேரவை உறுப்பினா் கே.சி.கருப்பணன், பாஜக செயற்குழு உறுப்பினா் சித்திவிநாயகன், பாமக நகரச் செயலாளா் தினேஷ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். தொடா்ந்து, ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நடைபெற்ற விழிப்புணா்வுப் பிரசாரம் மற்றும் பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று பேசினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.