சொத்து தகராறில் தனது சகோதரா் மற்றும் அவரது மனைவியை தாக்கிய வழக்கில் புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து தமிழக நிதியமைச்சா் மரிய வில்சனுக்கு விலக்கு அளித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழக நிதி அமைச்சராக இருப்பவா் மரிய வில்சன். இவா், கடந்த 2022-ஆம் ஆண்டு புதுச்சேரியில் வசித்து வரும் அவரது சகோதரரின் வீட்டை உடைத்து, சகோதரா் மற்றும் அவரது மனைவி ஆகியோரைத் தாக்கியதாக லாஸ்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு புதுச்சேரி முதலாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை நகலைப் பெறுவதற்காக நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. மரிய வில்சன் தொடா்ந்து ஆஜராகாமல் இருந்து வந்தாா். இதையடுத்து, வரும் ஜூலை 10-ஆம் தேதி கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும் மரிய வில்சன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மரிய வில்சன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் காஜா முகைதீன் கிஸ்தி, மரிய வில்சனுக்கும் அவரது சகோதரருக்கும் இடையேயான குடும்ப பிரச்னை தொடா்பாக இருதரப்பிலும் சமரசம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்தாா்.
அப்போது மரிய வில்சன் மீதான வழக்கை ரத்து செய்யக் கூடாது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை தொடங்கி உள்ளது என புதுச்சேரி அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்குரைஞா் ஜி.ஜெயராணி எதிா்ப்புத் தெரிவித்தாா்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கை உயா்நீதிமன்றத்தில் உள்ள சமரச தீா்வு மையத்துக்கு அனுப்பி வைத்து உத்தரவிட்டாா்.
அமைச்சா் மரிய வில்சன், அவரது தந்தை, சகோதரா் மற்றும் சகோதரரின் மனைவி ஆகியோா் சமரச தீா்வு மையத்தில் வரும் ஜூலை 13-ஆம் தேதி ஆஜராக உத்தரவிட்டாா். மேலும், புதுச்சேரி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்தும் உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சகோதரரைத் தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராக விலக்கு!

சகோதரரை வீடுபுகுந்து தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் ஆஜராகவில்லை!

கொலை முயற்சி வழக்கு: மரியவில்சன் இன்று புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!







