தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மாணவர் கோரிக்கை நியாயமனது! - ராகுல் காந்திவிஜய் மீண்டும் படத்தில் நடிக்க வேண்டும் என ஆசை! அமைச்சர் வினோத்நீட் வழக்குகளை உடனடியாக விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்! பிரதமர் மோடிகிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள் இன்று தொடக்கம்! ஈரான் போருக்கு அமெரிக்கா ரூ. 3.6 லட்சம் கோடி செலவு! டாஸ்மாக் ஊழியா்களுக்கு அக்.1 முதல் இஎஸ்ஐ திட்டம் அறிவிப்பு நீதிபதிகளின் ஓய்வு வயதை 61-ஆக உயா்த்த பரிசீலினை: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தல் மூலக்கூறு மருந்துகள் இறக்குமதி மீது 100% வரி: அமெரிக்கா திட்டத்தால் இந்தியாவுக்கு பாதிப்பு தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்!
/

அதிரடியாக உயர்ந்த அரிசி விலை! கிலோவுக்கு ரூ. 15 அதிகம்! - விநியோகப் பற்றாக்குறை காரணமா?

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகத் தமிழகத்தில் அரிசி விலையில் கடும் உயர்வு ஏற்பட்டுள்ளது குறித்து...

News image

அரிசி - பிரதிப் படம்

Updated On :23 ஜூலை 2026, 10:02 am IST

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகத் தமிழகத்தில் அரிசி விலையில் கடும் உயர்வு ஏற்பட்டுள்ளது; கடந்த 15 நாள்களுக்கு முன் அரிசி விலை கிலோவுக்கு ரூ.15 வரை உயர்ந்திருந்த நிலையில், இப்போது மீண்டும் கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.15 வரை உயர்த்தப்பட்டுள்ளது. வெறும் 15 நாள் இடைவெளியில் சாப்பாட்டு அரிசியின் விலை கிலோவுக்கு ரூ.30 வரை உயர்ந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

ஆந்திரம், தெலங்கானா மற்றும் கர்நாடகத்திலிருந்து உயர்தர நெல் ரகங்களின் (குறிப்பாக பாபட்லா பொன்னி மற்றும் கர்நாடகா பொன்னி) வரத்து குறைந்ததே இந்த திடீர் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

நீர்ப்பாசன வசதி இன்மை, பருவ மழை பெய்யாததால் காவிரி பாசன மாவட்டங்களில் கோடை மற்றும் குறுவை பருவ சாகுபடி குறைந்தன.

ஏற்றுமதி தேவை மற்றும் வரத்து குறைவு ஆகியவையே விலை உயர்வுக்குக் காரணம் என்று வியாபாரிகள் கூறினாலும், தமிழக மக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய உயர்தர நெல் ரகங்களின் உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

ஆனால், கடந்த ஆண்டில் குறுவை, சம்பா, தாளடி ஆகிய 3 பருவங்களிலும் நெல் அமோகமாக விளைந்ததாலும், நடப்பாண்டில் குறுவை பருவம் இன்னும் முடிவடையாததாலும் இந்த காரணத்தை ஏற்க முடியவில்லை.

இரு நாள்களுக்கு முன்பு வரை கிலோ ரூ.52க்கு விற்பனை செய்யப்பட்ட சாதாரண ரக பொன்னி அரிசி விலை இப்போது ரூ.8 விலை உயர்ந்து ரூ.60 ஆகியுள்ளது. மைசூர் பொன்னி, ஆந்திரா பொன்னி ஆகிய அரிசி வகைகளின் விலை 50 ரூபாயிலிருந்து ரூ.65 ஆக உயர்ந்துள்ளது. சன்னரக அரிசி விலை ரூ.64-லிருந்து ரூ.75 ஆக உயர்ந்திருக்கிறது. இட்லி அரிசி விலை கிலோ ரூ.43-லிருந்து ரூ.50 ஆக அதிகரித்துள்ளது. 26 கிலோ எடை கொண்ட அரிசி மூட்டை விலை ரூ.250 முதல் ரூ.400 வரை உயர்ந்திருக்கிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்டா மாவட்டங்களில் இந்திய உணவுக் கழகத்திற்காக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கொள்முதல் செய்யும் நெல் பெரும்பாலும் பொது விநியோகத் திட்டத்திற்கே (நியாயவிலைக் கடை-ரேஷன்) பயன்படுத்தப்படுகிறது. இதனால் வியாபாரிகள் அருகில் உள்ள மாநிலங்களிலிருந்து வரும் நெல் மற்றும் அரிசியையே நம்பியுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

உதாரணமாக, திருவொற்றியூரில் அரிசிக் கடை நடத்தி வரும் ஆர்.ராஜேஷ் (39), கடந்த ஒரு மாதத்தில் பல வகையான சாதாரண ரக அரிசிகளின் விலை கிலோவுக்கு ரூ. 10 முதல் ரூ. 15 வரை உயர்ந்துள்ளதாகத் தெரிவித்தார்.

"விலை உயர்வு பெரும்பாலும் டீலக்ஸ் மற்றும் ஆர்.என்.ஆர் போன்ற புழுங்கல் அரிசி ரகங்களிலேயே காணப்படுகிறது. முன்பு 25 கிலோ கொண்ட ஒரு மூட்டை ரூ. 1,100 முதல் ரூ. 1,250 வரை விற்கப்பட்டது; ஆனால் இப்போது அதன் விலை சுமார் ரூ. 1,500-ஆக (20% உயர்வு) அதிகரித்துள்ளது. அதே சமயம், எச்எம்டி, கொல்லம் மற்றும் அம்மன் சோனா போன்ற உயர்தர ரகங்களின் விலையில் இதுவரை பெரிய மாற்றம் இல்லை. முன்பு கிலோ ரூ. 50-க்குத் தொடங்கிய புழுங்கல் அரிசியின் சில்லறை விலை, இப்போது ரூ. 60-லிருந்து தொடங்குகிறது," என்று அவர் கூறினார்.

மேலும், வழக்கமாக ரெட் ஹில்ஸில் உள்ள மொத்த வியாபாரிகளிடமிருந்தே அரிசியை வாங்குவதாகவும், அங்கு ஆந்திரம் மற்றும் கர்நாடகத்தில் இருந்து அரசி கொள்முதல் செய்வதாக ராஜேஷ் கூறினார். இருப்பினும், அந்த மாநிலங்களில் விளைச்சல் குறைந்திருப்பது விநியோகத்தைப் பாதித்துள்ளது என தெரிவித்தார்.

ஜூலையில் இருமுறை உயர்ந்த அரிசி விலை: சில்லறை வணிகர்

"பாரம்பரியமாக அரிசி விளையும் பகுதியான ஆரணியைச் சேர்ந்த வணிகர்கள் கூட 'ரெட் ஹில்ஸ்' பகுதிக்கு வந்து ரொக்கப் பணம் கொடுத்து அரிசியை வாங்கிச் செல்கின்றனர்; இதனால் எங்களுக்குப் போதுமான சரக்கு கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது," என்று அவர் மேலும் கூறினார். இட்லி அரிசியின் விலையும் உயர்ந்துள்ளதாக மற்றொரு அரிசி வணிகர் தெரிவித்தார். எரிபொருள் விலை உயர்வால் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்த போதிலும் ஜூன் மாதம் வரை அரிசி விலையில் மாற்றம் ஏதும் இல்லை; ஆனால் ஜூலை மாதத்தில் விலை இருமுறை உயர்ந்துள்ளது என்று திருச்சி ரங்கா நகரைச் சேர்ந்த சில்லறை அரிசி வணிகர் எஸ். தண்டாயுதபாணி கூறினார்.

"சிறந்த ரகங்கள் மற்றும் சாதாரண ரகங்கள் என அனைத்து வகையான அரிசியின் விலையும், 26 கிலோ கொண்ட ஒரு மூட்டைக்கு ரூ. 150 முதல் ரூ. 200 வரை உயர்ந்துள்ளது," என்று அவர் கூறினார்.

சாகுபடி பரப்பு குறைந்ததால் ஏற்பட்ட விநியோகப் பற்றாக்குறையின் காரணமாக, ஆந்திரத்திற்கு நேரில் சென்றும் கூட, தேவையான அளவு 'ஆந்திரா பொன்னி' நெல்லைத் தம்மால் கொள்முதல் செய்ய முடியவில்லை என்று திருச்சி அரிசி ஆலை உரிமையாளர் பி. ரகுராமன் தெரிவித்தார்.

கடந்த சில நாள்களில் புழுங்கல் அரிசியின் விலை 25 கிலோ கொண்ட ஒரு மூட்டைக்கு ரூ. 30 முதல் ரூ. 100 வரை உயர்ந்துள்ளதாக மடிப்பாக்கத்தைச் சேர்ந்த மளிகைக் கடை உரிமையாளர் ஒருவர் கூறினார். "பொன்னி புழுங்கல் அரிசி போன்ற உயர்தர ரகங்களின் விலையில் அதிகபட்சமாக 25 கிலோ மூட்டைக்கு ரூ. 100 வரை கூடுதல் உயர்வு காணப்படுகிறது," என்று அவர் குறிப்பிட்டார்.

"துங்கபத்ரா அணையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், கடந்த ஆண்டு (2025) விதைப்புப் பருவத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த விவசாயிகளைச் சாகுபடி செய்ய வேண்டாம் என்று கர்நாடக அரசு கேட்டுக்கொண்டிருந்தது." இது சந்தையில் நெல் கிடைப்பதில் கடும் சரிவை ஏற்படுத்தி, விலை உயர்வுக்கு வழிவகுத்தது," என்று தஞ்சாவூர் நெல் மற்றும் அரிசி வணிகர்கள் சங்கத்தின் தலைவர் பி. பால்ராஜ் கூறுகிறார்.

பாசுமதி அல்லாத அரிசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்ததும், தென்மேற்குப் பருவமழை பற்றாக்குறையும் இந்தப் பிரச்னையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கர்நாடகம் மற்றும் ஆந்திரத்தை சேர்ந்த வணிகர்கள் கடந்த ஒரு வாரமாக ஆர்டர்களை ஏற்காததால் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்றும் அவர் கூறினார். இரு மாநிலங்களிலும் நிலவும் நீர் பற்றாக்குறையால் ஏற்பட்ட பயிர் இழப்பே இந்தச் சரிவுக்குக் காரணம் என்று மதுரை மாவட்ட மிகச்சிறிய மற்றும் சிறுதொழில் நிறுவனங்கள் சங்கத்தின்(மாடிட்சியா) உணவுப் பிரிவுத் தலைவர் ஏ. அன்பரசன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் திருச்சி மாவட்டத் தலைவர் எம். சின்னசாமி கூறுகையில், சமீபத்திய அரிசி விலை உயர்வு ஒன்றும் அசாதாரணமானதல்ல என்றார். தமிழ் மாதமான ஆடியில் (ஜூலை மத்தியில் தொடங்கி ஆகஸ்ட் மத்தி வரை) அரிசி விலை வழக்கமாக சற்று உயர்வதுண்டு என்று அவர் தெரிவித்தார்.

"நீர் பற்றாக்குறையால் இந்த பருவத்தில் குருவை பயிர் சாகுபடி பாதிக்கப்பட்டது அடுத்த சில மாதங்களில் மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இருப்பினும், குருவை பயிர் பாதிப்பைக் காரணம் காட்டி, அரிசி வரத்து குறையும் என்பதை எதிர்பார்த்து வணிகர்கள் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்க முயற்சிக்கும் வாய்ப்பு உள்ளது," என்று அவர் கூறினார்.

திருச்சியைச் சேர்ந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாயப் பிரிவு மாநிலப் பொருளாளர் வயலூர் என். ராஜேந்திரன் கூறுகையில், வெள்ளை பொன்னி (முன்பு பயிரிடப்பட்ட ரகம்), ஆந்திர பொன்னி(பிபிடி), ஏடிடி 43 மற்றும் ஏடிடி 54 போன்ற உயர்தர நெல் ரகங்களின் சாகுபடி தமிழகத்தில் குறைவாகவே உள்ளது என்று தெரிவித்தார்.

இதுகுறித்து நுகர்வோர் பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவரிடம் பேசுகையில், அரிசி விலையில் ஏற்படும் சந்தை ஏற்ற இறக்கங்களில் தங்கள் துறை தலையிடாது என்று கூறினார். "இருப்பினும், விலை வழக்கத்திற்கு மாறாக அதிகரித்தால், நாங்கள் அது குறித்து விசாரிப்போம்," என்று அவர் தெரிவித்தார்.

பொன்னி அரிசிக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு

ஆந்திரம், தெலுங்கானா மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலிருந்து உயர்தர நெல் ரகங்களின் (குறிப்பாக பாபட்லா பொன்னி மற்றும் கர்நாடக பொன்னி) வரத்து குறைந்ததே விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிப்பதுடன்; மொத்த வணிகர்களின் அரிசி கையிருப்புக்கு உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும். இந்த நடவடிக்கைகளின் மூலம் சந்தையில் அரிசியின் புழக்கத்தை அதிகரித்து விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல், மாநில அரசும் விலைக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அரிசி ஆலைகள், மொத்த வணிகர்கள் ஆகியோரிடம் உள்ள அரிசியில் 20 சதவீதத்தை அடக்க விலைக்கு அரசே கொள்முதல் செய்து நியாயவிலைக்கடைகள், கூட்டுறவு விற்பனை அங்காடிகள் ஆகியவற்றின் மூலம் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய முன்வர வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Summary

Rice prices in Tamil Nadu have experienced a sharp upward surge over the past few weeks, climbing by Rs 5 to Rs 15 per kg.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.